இசைக்கு மயங்காத இதயம் எதுவும் இல்லை. எனவே, இசை மனிதர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் அது நம்மை நகர்த்தும் சக்தயாகவும் அமைகிறது என்பது மறுப்பதற்கில்லை. சிறு குழந்தை முதல் பெரியோர் வரை ஒவ்வொரு பருவத்திலும் இசை கவர்ந்து இழுக்கக்கூடிய காந்த சக்தியாக திகழ்கிறது.
இசையின் மொழி ஆழமானது மற்றும் உலகளாவியது, அனைவருக்கும் புரியும் வகையில் பகிரப்படுகிறது.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களின் இதயங்களையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட உள்நாட்டு பாடகர் திலிப் வர்மன் அவரின் மயக்கும் குரலுக்காக உள்நாட்டு இந்தியச் சமூகத்தினரிடையே பிரபலமாக அறியப்படுகிறார்.
பினாங்கில் பிறந்து வளர்ந்த திலிப், 41, கடந்த 20 ஆண்டுகளாக இசைத்துறையில் முன்னணி வகித்து வருகிறார். 20 ஆண்டுகள் உருண்டோடியும் இன்னும் மலேசிய இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டுள்ளார்.
அண்மையில், முத்துச் செய்திகள் நாளிதழ் குழுவினர் பாடகர் திலிப்-ஐ சிம்பாங் அம்பாட்டில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, இசைத்துறையில் அவரது பின்னணி மற்றும் பயணத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முற்பட்டனர்.
பொதுவாகவே, இசைப் பின்னணி குடும்பத்தில் இருந்து வந்த திலிப் குறிப்பாக அவரது தந்தை பி. சுந்தர் அவர்களின் வழிகாட்டலில் இசை மீது ஆர்வம் கொண்டு கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
“நான் இயற்கையாகவே இசைப் பின்னணியில் இருந்து வந்தாலும், நான் ஆரம்பக் காலக்கட்டத்தில் பல போராட்டங்களைச் சந்தித்தேன். தொடக்கத்தில், உள்ளூர் கச்சேரி அல்லது திருமண வரவேற்புக்குப் பாடுவதவற்கு ரிம20 மட்டுமே சம்பளமாகப் பெற்றேன்.
“நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்நோக்கிய சவால்களைப் பற்றிப் பேசுகிறேன். ஆனால், அந்தச் சவாலான தருணங்கள்தான் எனது அடுத்தடுத்த வெற்றியை வடிவமைப்பதில் மிகவும் பங்களித்தது.
“எனக்கு, 2002-ல் “நவீனம்” என்ற பாடல்தொகுப்பில் பாட வாய்ப்பு கிடைத்தபோது ‘இரு கண்கள் பேசும்’ என்ற பாடலைப் பாடி இசை உலகிற்கு நன்கு அறிமுகமானேன்.
இதைத் தொடர்ந்து, மலேசியாவின் இசைத்துறையில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களுடன் பணியாற்றத் தொடங்கினேன். மேலும் பல பாடல்களும் மாபெரும் வெற்றியைப் படைத்தது. இதில் ‘உயிரைத் தோலைத்தேன்’, ‘மீண்டும் மீண்டும்’, ‘கனவெல்லாம் நீதானே’ மற்றும் பல பாடல்களும் அடங்கும்,” என்று திலிப் பேட்டியின் போது கூறினார்.
திலிப் பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளர், பாடலாசிரியர், ‘சவுண்ட் இன்ஜினியர்’ மற்றும் இசையில் பல திறமைகள் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. வீணை, கித்தார், வயலின் போன்ற பல வகையான இசைக்கருவிகளையும் வாசிக்கக் கூடிய சகலகலா வல்லவன்.
மேலும், அவர் கலையின் மீது கொண்ட தூய அன்பின் காரணமாக பல பெற்றிப் படைப்புகளைக் கொடுக்க முடிந்தது, என்றார்.
இசைத்துறையில் தனது 20 வருடப் பயணத்தில், திலிப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக இந்தியாவில் இருந்து ‘எழுச்சிமிகு இசையமைப்பாளர் எழுச்சிமிகு இசை’ என்ற ஏ.பி.ஜே அப்துல் கலாம் மக்கள் நலன் (2022), மாநிலத்தின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘கலைமாமணி விருது’ (2022) மற்றும் பல பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், ஆஸ்ட்ரோ உலகம் விருதளிப்பு விழாவில் ‘2023 ஆம் ஆண்டின் பிரபலமான இசையமைப்பாளர்’ என்ற விருதையும் வென்றார்.
இசைத்துறையில் அவரது நீண்ட பயணத்தைத் தவிர, திலிப் அவரின் இசைக் கலையை கல்வித் துறைக்கும் பங்களித்துள்ளார்.
அவர் புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி, ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி போன்ற பள்ளிகளுக்குப் பாடல்களை இயற்றி பாடியுள்ளார்.
அவரின் இசைப் பயணம் குறித்து ஐந்தாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடப் புத்தகத்திலும் இடம்பெற்றது பாராட்டக்குரியதாகும்.
பினாங்கில் மிகப் பெரிய அளவிலான இசைக் கச்சேரி நடத்த இலக்கு கொண்டதாகவும் கூடிய விரைவில் இசை அகாடமி தொடங்கி இசை ஆர்வம் கொண்ட இளையத் தலைமுறைக்கு பயிற்சி வழங்க உத்தேசிப்பதாகவும் திலிப் அவர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து முத்துச் செய்திகள் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.