பாகான் – பினாங்கு மாநிலத்தின் மிகப்பெரியதாக கருதப்படும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு இன்று பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டார். 2019-ஆம் ஆண்டிற்கான பள்ளி பருவம் இன்று தொடங்கியது. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு 146 மாணவர்கள் முதலாம் ஆண்டில் கால் தடம் பதித்துள்ளனர்; இதில் மூன்று இஸ்லாமிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2015-ஆம் ஆண்டு இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கால்நாட்டு விழா நடைபெற்று கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற வேளையில் ஒப்புதல் சான்றிதழ் கிடைக்காததால் திறக்க கால தாமதம் ஏற்பட்டது. ஆனால், பினாங்கு இரண்டாம் துணை முதல்வரின் முயற்சியில் இக்கட்டிடத்திற்கு சான்றிதழ் பெறப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரண்டு மாடி கட்டிடம் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் திறக்கப்பட்டது என அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பாஸ்கரன் தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார். 12 வகுப்பறை, சிற்றுண்டிச்சாலை, நூல்நிலையம், ஆலோசனை அறை, சிகிச்சை அறை மற்றும் 21ஆம் நூற்றாண்டு வகுப்பறையுடன் இப்புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி பல ஆண்டுகளாக இரண்டு பள்ளி நேரமாகச் செயல்படுகிறது. தற்போது புதிய கட்டிடத்தின் துணையுடன் இவ்வாண்டு தொடங்கி ஒரு நேர பள்ளியாக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி செயல்படும் என்று தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் குமரன், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி சிறப்புக்குழுத் தலைவர் டத்தோ அன்பழகன், தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.சிங்காரவேலு, இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ இராமசந்திரன், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.யாழிஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், மாணவர்கள் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் திடல் இன்றி சிரமப்படுவதால், அப்பள்ளி அருகாமையில் அமைந்திருக்கும் மாநிலத்திற்கு சொந்தமான 1.1 ஹெக்டர் நிலத்தை இப்பள்ளிக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பொருளாதார திட்டமிடல், கல்வி, அறிவியல் மற்றும் மூலதன வளர்ச்சி, தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்
கல்வி ஒரு மாணவனின் மேம்பாட்டிற்கு மூலதனம் என்பதால் மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வியைக் கற்க பினாங்கு மாநில பள்ளிகளில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும். இதனிடையே, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் எதிர்காலத்தில் மின்னியல் நூல்நிலையம் அமைக்கத் திட்டம் மேற்கொள்ளவிருப்பதாகவும் சூளுரைத்தார். தொழில்துறை புரட்சி 4.0 எதிர்கொள்ள மாணவர்கள் சிறுவயதில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆற்றல் பெற்றிருப்பதை உறுதிச்செய்ய அனைத்து பள்ளிகளில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான அவர் உறுதியளித்தார்.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை 840 மாணவர்களும், 55 ஆசிரியர்களும் இடம்பெறுகின்றனர். இத்தமிழ்ப்பள்ளியில் பாலர்ப்பள்ளி இடம்பெறுவது பாராட்டக்குரியதாகும். இப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பாஸ்கரன், பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்குப் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தார்
அனைவரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.