மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு கூடுதல் ஒரு ஏக்கர் நிலம் உறுதியானது – பேராசிரியர்

 

பட்டர்வொர்த்  – பினாங்கு மாநிலத்தில் உள்ள பெரியப் பள்ளிகளில் ஒன்றான மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் நீண்டநாள் விண்ணப்பத்திற்கு பின் ஒரு ஏக்கர் கூடுதல் நிலம் உறுதிப்படுத்தப்பட்டதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உறுதிப்படுத்தினார்.

பல்நோக்கு மண்டபம் கட்டுமானத்தில் உள்ளது

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகை அளித்த பேராசிரியர் இராமசாமி , பள்ளி வளாகத்தை சுற்றிப் பார்த்தப்பின், பினாங்கு மாநில அரசாங்கம் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கான புறப்பாட நடவடிக்கைக்கு ஓர் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

பினாங்கு மாநில முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி  2018ஆம் ஆண்டு அப்பள்ளிக்கு வருகை தந்தபோது விளையாட்டுத் திடல் அமைப்பதற்கு 1 ஏக்கர் நிலம் வழங்குவதாக அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டது.

மாநில மாவட்டம் மற்றும் நில அலுவலகத்திடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னர் அந்நிலத்தை பள்ளி நிர்வாகம் தங்களின் தேவைக்குப் பயன்படித்திக்கொள்ளலாம் என்று இன்று மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்த போது பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார்.

தொடர்ந்து இப்பள்ளி வளாகத்தில் பல்நோக்கு பொது மண்டபம் கட்டுவதற்காக ரிம25 இலட்சம் நிதி தேவைப்படும் வேளையில் டத்தோ ஸ்ரீ ஆர்.அருணாசலம் தலைமையில் ரிம15 இலட்சம் திரட்டப்பட்டுள்ளது. பினாங்கு மாநில அரசாங்கத்திடம் இருந்து கனிசமான தொகையை பெற்றுத் தருவதாகவும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழுத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.அருணாசலம், துணைத் தலைவர் கோ.சண்முகநாதன், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் கே.அன்பழகன், செயலாளர் கு.கிருஷ்ணசாமி,
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் த.யாளிஸ்வரன், பள்ளியின் நிர்வாகக்குழு , மேலும் பலர் கலந்துக்கொண்டனர்.

பினாங்கு மாநிலத்தில் கல்வி தரத்திலும், புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்கும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, மாநிலத்தின் பெரிய தமிழ்ப்பள்ளி என்பதால் பள்ளியின் தேவைகள் உடனுக்குடன் கவனிக்கபடுவது அவசியம் என்று இராமசாமி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும்  பேராசிரியர் கூறுகையில், தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாமல் அதனை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

“மூடப்படும் நிலைமையில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் (அதாவது பத்து மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே கொண்ட தமிழ்ப்பள்ளிகள்) உரிமங்களை இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களை அடையாளங்கண்டு அவ்வுரிமத்தை கொண்டு அங்கு அப்பள்ளிகள் அமைக்க வேண்டும்.  இதன் வழி தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை நிலைநிறுத்த முடியும்,” எனும் கருத்தை பேராசிரியர் முன்வைத்தார்.

முன்னதாக, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தனது தொகுதியில் தமிழ்ப்பள்ளி அமைக்க வலியுறுத்தியதன் வாயிலாக இக்கருத்தை பேராசிரியர் பதிவிட்டார். பினாங்கில் கூடுதல் தமிழ்ப்பள்ளி அவசியம் என்றும் கூறினார். குறைவான மாணவர் உள்ள பள்ளியின் உரிமத்தைக் கொண்டும் , பாகான் டாலாமில் ஒரு பள்ளி அமைக்கலாம் என்று சத்தீஸ் முடியாண்டி கூறினார்.