மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் புதிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறப்பு விழாக் கண்டது

Admin
mak mandin 2

பாகான் – பட்டர்வொர்த்தில்அமைந்துள்ள மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பயிலும் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பள்ளி வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானத்தால் பயனடைவர்.

இந்தப் புதிய மைதானத்தில் ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும் மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கும். மாணவர்களுக்கு உடற்கல்வி,பாடநெறி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட இவ்விடம் அதிக வாய்ப்புகளை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெற்ற மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி பல்நோக்கு விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவின் போது, பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுவின் தலைவரும், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, பல்நோக்கு மைதானத்தை நிர்மாணிப்பதில் பள்ளியின் சாதனையைப் பற்றி தனது பாராட்டினைத் தெரிவித்தார்.

mak mandin

“இன்று திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, பல்நோக்கு மைதானத்தை மேலும் மேம்படுத்தும் எண்ணம் தோன்றியுள்ளது.

“எனது துணைத் தலைவரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரனுடன் சேர்ந்து, மாணவர்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும் வகையில் மைதானத்தின் மேல் கூரையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

“தமிழ்ப்பள்ளிகளுக்கான அடுத்த ஆண்டு ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க உத்தேசித்துள்ளோம்,” என்று சுந்தராஜூ மேலும் கூறினார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தராஜு கூறுகையில், பல்நோக்கு மைதானத்தின் மேல் கூரை அமைக்கப்பட்டால், பள்ளிக்குக் கூடுதல் வருமானம் ஈட்டக்கூடிய பிற நிகழ்ச்சிகள் நடத்தவும் வாடகைக்கு விடலாம்.

“மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பினாங்கில் உள்ள மிகப்பெரிய தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாகும்.

“அதன் வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், நாங்கள் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இடமளிக்க முடியும், அவர்களின் கல்விக்கான சிறந்த சூழலை உறுதிசெய்ய முடியும்.

“நமது தமிழ் சமூகத்தை ஒற்றுமை மற்றும் நமது பள்ளிகளில் கல்வி கற்பதன் மூலம் மேம்படுத்துவோம். நாம் தமிழ் மொழியையும் பாதுகாக்க வேண்டும், அது நமது சமூகத்தின் அடையாளம்,” என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு கூறினார்.

இதற்கிடையில், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுவின் கீழ் உள்கட்டமைப்பு இலாகாவுக்குப் பொறுப்பான குமரன் கிருஷ்ணன், மாணவர்கள் கல்வி பயில சிறப்பான சூழலை ஆதரிப்பதற்காக பள்ளி பொது வசதிகளை மேம்படுத்துவதற்கான குழுவின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாகான் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன், பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை கட்ட நிதியுதவி வழங்கிய மாநில அரசுக்கு நன்றித் தெரிவித்தார்.

பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மாநில அரசு மொத்தம் ரிம100,000 பள்ளிக்கு ஒதுக்கியுள்ளது. அதில் ரிம70,000 இந்த மைதானக் கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் மீதமுள்ள தொகை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
புதிய மைதானத்தை நிர்மாணிப்பதற்கான மொத்த செலவு ரிம139,000 என்று பெற்றோர்ஆசிரியர் சங்கத் தலைவர் பூவனேஸ்வரன் பகிர்ந்து கொண்டார்.

பூவனேஸ்வரனின் கூற்றுப்படி, பள்ளியின் நிதித் திரட்டும் நிகழ்ச்சியின் போது ரிம30,000 திரட்டப்பட்டது, அதே நேரத்தில்முன்னாள் மாணவர் டத்தோ ஸ்ரீ V. சண்முகநாதனால் ரிம46,000 நிதி வழங்கப்பட்டது, என்றார்.

இந்த கூட்டுமுயற்சி, மாநில அரசின் ஒதுக்கீட்டுடன் இணைந்து, புதிய மைதானத்தின் மொத்த கட்டுமானச் செலவை ஈடுகட்ட உதவியது.