தெலுக் பஹாங் – “மாநில அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாண்டு ரசாயனக் கலப்பு கொண்ட நெழிகி அல்லது போலிஸ்திரின் பயன்படுத்திய விளக்குகள் கடலில் விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுயடையாமல் பாதுகாக்கப்படுவதோடு கடல்வாழ் உயிரினங்களையும் காக்க முடியும்” என பினாங்கு இந்து சங்க இளைஞர் பேரவை தலைவர் தர்மன் தெரிவித்தார். நாடு தழுவிய நிலையில் மாசி மகத் தெப்பத் திருவிழா பினாங்கு மாநிலத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் திருத்தலங்களில் ஒன்றான தெலுக் பஹாங்கில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன் ஆலயத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இவ்வாலயம் 1897-ஆம் ஆண்டு தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் மீனவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டது. பின்னாளில் இந்த ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கியது. அவ்வகையில் இத்திருவிழா நேற்று 08-03-2020-ஆம் தேதியன்று சிறப்பான வகையில் நடைபெற்றது. அன்றைய தினம் ஏறக்குறைய 40,000 பக்தர்கள் கூட்டம் நாடு முழுவதிலும் இருந்து அலை மோதியது.
1973-ஆம் ஆண்டு காளியம்மன் விக்ரகத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு அரசாங்க விசைப்படகு பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இரு படகுகளை இணைத்து முழுமையான தெப்பமாக உருவாக்கி இன்றைய காலக்கட்டத்தில் நாடுத் தழுவிய நிலையில் இத்தெப்பத் திருவிழா மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழா அன்று அதிகாலை தொடங்கி 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடற்கரையிலிருந்து சிங்கமுகக் காளியம்மன் ஆலயத்திற்குப் பால் குடத்தை ஏந்திய வண்ணம் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். மதியம் மற்றும் இரவு வேளைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ஊர்வலம் தொடங்கும் போது சிங்கமுகக் காளியம்மனின் திருவருளைப் பெறும் பொருட்டு தங்கள் எண்ணங்கள் நிறைவேற மனமுருகி வேண்டி மிதவை விளக்குகளைக் கடலில் விட்டனர்.
மிதவையை வண்ண விளக்குகளைக் கொண்டு மிதக்கும் தேராக்கி மங்கள வாத்திய முழக்கத்துடனும் வாண வேடிக்கை ஒலியுடனும் சிங்கமுக காளியம்மனைக் கடலில் பவனி வரச் செய்வது இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும்.
மிதக்கும் தேரை இரு படகுகள் மூலம் இழுத்தவாறு கடலின் ஒரு பகுதிக்குக் கொண்டு சென்று மீண்டும் அத்தெப்பத்தில் பவனி வந்த அம்மனை ஆலயத்திற்கு கொண்டு வந்து சிறப்புப் பூசைகள் நடத்தப்பட்டன.
சிங்கமுக காளியம்மன் கடலில் பயணிக்கும் அழகிய தெப்பத் தேருடன் பக்தர்கள் பல வடிவங்களில் செய்யப்பட்ட தெப்பத் தீப விளக்குகளையும் இத்திருவிழாவின் போது கடலில் விடுவது இவ்விழாவின் கூடுதல் சிறப்பு அம்சமாகும்.