பாகான் ஜெர்மால் – பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் மற்றும் பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (PYDC) ஏற்பாட்டில் ‘We Care for you’ கல்வி கண்காட்சி 2022 வருகின்ற ஜூலை, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் காலை மணி 10.00 முதல் மாலை மணி 6.00 வரை ஆங் சீ சோங் சூ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
“இக்கல்வி கண்காட்சி பிரத்தியேகமாக மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) மற்றும் மலேசிய உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்) முடிவுகளைப் பெற்றுள்ள மாணவர்கள் தங்களின் மேற்கல்வியைத் தொடர சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது,” என இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ அவரது சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
பாகான் ஜெர்மால் தொகுதியில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ள இக்கல்வி கண்காட்சியில் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையங்கள், 25 அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி என கூடங்கள் அத்தலத்தில் அமைக்கப்படும்.
மேலும், சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் இக்கல்வி கண்காட்சியில் கலந்து கொள்ள வேண்டும். தங்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில் வாய்ப்புகள், உபகாரச் சம்பளம் போன்ற முக்கிய அம்சங்களை இக்கண்காட்சியில் பெற்று பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், அத்தினத்தன்று அதிஷ்ட குலுக்கள், இலவச கருத்தரங்கு, வினா விளையாட்டு (Quiz), பரிசுத் தொகை ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். எனினும், சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் தொழிற்சார்ந்த கல்விகளை தேர்ந்தெடுத்து மேற்கல்வியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். பினாங்கு மாநில அரசு தொழில்சார்ந்த மையங்களில் கல்வி பயில்வதையும் ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்கது.