மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்குப் பள்ளியில் பாடம் கற்பிப்பதே சிறந்த தேர்வு

Admin

 

கோவிட் -19 தாக்கத்தால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று ஆரம்பப்பள்ளி (முதலாம், இரண்டாம் & மூன்றாம் வகுப்பு) மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றனர். பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் பங்கேற்பு, மாணவர்களின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) பின்பற்றுதல் குறித்த நேர்காணலில் இன்று முத்துச் செய்திகள் நாளிதழ் கண்ணோட்டம் மேற்கொண்டனர்.

இன்று காலை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப திரண்டனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மாணவர்களைத் தவிர யாரையும் பள்ளி வளாகத்தில் அனுமதிக்கவில்லை. மேலும், மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தல், கைத்தூய்மி தெளிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டன.

இன்று தொடங்கிய ஒன்றாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில்  பயில 80 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்கு வருகை மேற்கொண்டுள்ளனர்,” என மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் யாளீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாண்டு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் 120 மாணவர்கள் முதலாம் ஆண்டிற்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் யாளீஸ்வரன்

மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பே பள்ளி வளாகத்தில் கிருமிநாசனி தெளிதல்; சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களைத் துரிதப்படுத்தியதாகக் கூறினார்.

“நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு வருகையளிப்பதால் அவர்களின் மனநிலை மற்றும் கல்வி அடைவுநிலையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவது மிகுந்த சவாலாக அமையும். இதற்காக மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் நெறிவுரை அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் மட்டுமின்றி மாணவர்கள்  கல்விகேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என  பெற்றோர் ஆசிரியர் சங்கம் இம்முயற்சியை எடுத்துள்ளது,” என யாளிஸ்வரன் விவரித்தார்.

“கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக அச்சம் இருந்தாலும் மாணவரின் கல்வியின் மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கு அனுப்பும் கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர்,” என தாயார் மு.தாமரை (வயது 47) முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தாயார் மு.தாமரை தன் மகள் கு.யாழினியுடன் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்தார்

“இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் தன் மகள் கு.யாழினி முதலாம் ஆண்டில் இருந்து இயங்கலை வாயிலாக பாடங்களைக் கற்றார். இருப்பினும், இது பள்ளிக்கு நேருக்கு நேர் சென்று கல்வி கற்கும் சூழலுக்கு ஈடாகாது. ஆகவே, இவ்வாண்டு பள்ளிகள் திறக்கப்படுவதை ஆதரிக்கிறேன். மத்திய அரசு நிர்ணயித்துள்ள எஸ்.ஓ.பி-களை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு தன் மகளிடம் அதிகமாக இருக்கிறது. எனவே, பாதுகாப்பாக அவள் கல்வியைத் தொடரக்கூடும்,”  என மு.தாமரை நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, முதலாம் ஆண்டில் கல்விப்பயணத்தை தொடரவிருக்கும் மாணவி காவன்யா பாதுகாப்பான முறையில் கல்வியைத் தொடர ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம் என்றார். பெற்றோர்கள் முகக் கவசம், கைத்தூய்மி போன்ற பாதுகாப்பு அமசங்களை ஏற்பாடுச் செய்து கொடுத்திருந்தாலும் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் அதனை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவர் என குடும்ப மாது இரா.இமாவதி, வயது 37 தெரிவித்தார்.

  1. திருமதி.இமாவதி தன் மகள் காவன்யா

மாணவர்கள் இயங்கலை வாயிலாக கல்வி பயின்றாலும், அவர்களின் அடைவுநிலை அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஆனால், பள்ளியில் கல்வி மேன்மை, கட்டொழுங்கு, விளையாட்டு மற்றும் புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் மாணவர்கள் பங்கு கொண்டு சிறந்தவராக திகழ முடியும். ஆகவே, ஒரு பெற்றொராக இயங்கலையை விட பள்ளிக்கு சென்று கல்வி கற்பதைதான் விரும்புகிறேன் “, என இரா.இமாவதி நம்பிக்கை தெரிவித்தார்.