- மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் சமய பாடப்புத்தக இரண்டாம் பதிப்பகம் வெளியீடுக் கண்டது. இப்பாடப் புத்தகம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு வழிக்காட்டியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்பில் வெளியிடப்பட்ட இப்பாடப் புத்தகம் இந்து சமயத்தையும் இந்து சார்ந்த பண்பாட்டுக்கூறுகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்கால சூழலுக்கு ஏற்ப மலேசிய இந்துதர்ம மாமன்றம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் விரைவில் மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என அதன் தலைவர் அ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பிறை, ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராதாகிருஷ்ணன் இச்சமய பாடப்புத்தகத்தை வெளியிட்டார். ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களின் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திட்டங்கள் யல்படுத்த ஏறக்குறைய ரிம 250,000.00 நிதி ஒதுக்கி வருவது பாராட்டக்குரியதாகும்.
பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய நிர்வாகம் இப்பாட புத்தகத்தை இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் போட்டி ஆற்றலுடனும் அதே வேளையில் பிரச்சனைக்கு தீர்வுக்காண குறுகிய வட்டத்திற்கு வெளியே சிந்திக்கும் ஆற்றலை பெற்றிருக்கும் வகையில் இப்பாட புத்தகம் வழிக்காட்டும் என நம்புவதாக இந்துதர்ம மாமன்ற தலைவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, பினாங்கு இந்துதர்ம மாமன்ற ஒத்துழைப்புடன் இம்மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சமய வகுப்பினை நடத்தி வருகிறது. இதில் 30 இந்துதர்ம மாமன்ற சமய ஆசிரியர்களும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தன்னார்வ அடிப்படையில் இந்திய மாணவர்களுக்குச் சமயக் கல்வியை புகட்டி வருகின்றனர். ஆசிரியர்களுக்காக இரண்டு நாட்களுக்கு சமயக் கல்வி வழிகாட்டி பட்டறை ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைப்பெற்றது.
இப்பட்டறையில் நிறைவு விழாவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, மலேசிய இந்துதர்ம மாமன்ற துணை தலைவர் சோ.சுப்பிரமணியம், இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலைய தலைவர் ந.தனபாலன், முனிஸ்வரர் ஆலய தலைவர் டத்தோ கோபால கிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி “இம்மாதிரியான சமயக் கல்வி திட்டங்கள் ஒவ்வொரு மாணவனையும் இந்துவாகவே வாழ வித்திடும், இதன்வழி மத மாற்றம் பிரச்சனையை முற்றாக களைய முடியும். மேலும், பிற சமூகநல இயக்கங்களும் இந்துதர்ம மாமன்றத்தை முன்னோடியாகக் கொண்டு இம்மாதிரியான சமயக் கல்வி திட்டங்களை அமல்படுத்த வேண்டும்”, என அவர் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, சமயக் கல்வியை மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் கொண்டு சேர்ப்பதை தாம் தலையாய நோக்கமாக கொண்டுள்ளதாக இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலைய தலைவர் தனபாலன் அவர்தம் கருத்துகளையும் முன்வைத்தார்.