ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் பணிப்புரியும் அரசு ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு பணி ஓய்வும் பெறும் 76 ஊழியர்களுக்கு ‘சேவை பாராட்டு விழா‘ சிறப்பாக நடைபெற்றது.
“இம்மாநிலத்தின் மேம்பாட்டுக்கு முதுகெழுப்பாகச் செயல்பட்டு பங்களித்த அனுபவமுள்ள அரசு ஊழியர்களின் இழப்பை மாநில அரசு உணர்கிறது. மேலும், அவர்களின் ஆற்றல், பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மாநிலத்தின் நல்வாழ்வுக்காக நேரத்தை தியாகம் செய்து பணியாற்றியதை நினைவுக்கூற வேண்டும்,” என முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கூறினார்.
ஒவ்வொரு முறையும் நேர்மையான மற்றும் பொறுப்புணர்ச்சிக் கொண்ட ஓர் அரசு அதிகாரி வேறொரு அலுவலகத்திற்கு மாற்றப்படும் போது; பதவி உயர்வு அல்லது பணி ஓய்வு பெறும்போது, மாநில அரசின் நிர்வாகத்தில் அவர்களின் இழப்பை மாநில முதல்வர் என்ற ரீதியில் அதிகமாக உணருகிறேன், என்றார்.
“இருப்பினும், பொதுச் சேவை துறையில் இச்சூழ்நிலை எப்பொழுதும் நிலவி வரும். எனவே, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர் என்ற முறையில், இச்சூழ்நிலையை நாங்கள் சரி செய்ய வேண்டும்,” என்று உரையாற்றியபோது கூறினார்.
இந்நிகழ்வில் முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் ஜாகியுதீன் அப்துல் ரஹ்மான், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்ட ஆலோசகர் டத்தோ நோராஸ்மி மொஹமட் நரவி, மாநில நிதி அதிகாரி டத்தோ சாருல் பஹியா அபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணி ஓய்வு பெறும் பட்டியலில் மாநில செயலாளர், டத்தோ ஸ்ரீ ஃபரிஸான் டாருஸ் கடந்த 26 ஆண்டுகளாக இம்மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பணி ஆற்றியுள்ளார்.
பினாங்கு மாநில நிர்வாகத்தின் கீழ் 26 ஆண்டுகள் பணியாற்றுவது எளிதான காரியம் அல்ல, இருப்பினும் டத்தோ ஸ்ரீ ஃபரிஸான் டாருஸ் அப்பயணத்தை சிறப்பாக செய்து முடித்துள்ளார். அவரின் நிர்வாகத்தின் கீழ்
பின்பற்றபட்ட ஒழுக்கம், தரம் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாடு மாநில அரசின் இலக்கு மற்றும் முன்னெடுப்புத் திட்டத்தை மெய்படுத்த பெரிதும் பங்காற்றியது என்றும் கூறினார்.
“மாநில செயலாளரான டத்தோ ஸ்ரீ ஃபரிசான் பல்வேறு நிலைகளில் இம்மாநிலத்திற்குப் பெறுமையும் அங்கீகாரத்தையும் சேர்த்துள்ளார். நான் மாநில அரசை பிரதிநிதித்து அனைத்து ஊழியர்களையும் வாழ்த்துவதோடு அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர்களின் மாநில அரசிற்கான சேவை, அர்பணிப்பு மற்றும் தியாகங்கள் தொடர்ந்து நினைவுக்கூறப்படும்,” என்று அவர் கூறினார்.
ஃபரிசான் உரையாற்றுகையில், ஓய்வூதியம் பெறுவோர் தன்னார்வம் தொண்ட நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது உள்ளூர் சமூகங்களுக்கு உதவி செய்து சமுதாயத்திற்குத் தொடர்ந்து தங்கள் சேவைகளை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
அனுபவம் மிக்க அரசு ஊழியர்கள் முழுமையாக ஓய்வு பெறக்கூடாது. ஏனெனில், அனுபவம் குறிப்பாக அரசு நிர்வாக அனுபவம் ஒரு முக்கியமான மதிப்பு மிக்க சொத்து என மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் 65 ஊழியர்கள் கட்டாய ஓய்வூதிய வயதை எட்டிய பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற போகிறவர்கள், ஏழு பேர் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் காலமானவர்கள் நான்கு பேர் ஆகியோருக்கு சேவை பாராட்டி விழாவில் கெளரவிக்கப்பட்டனர்.