ஜார்ச்டவுன் – மாநில பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவரான சாவ் கொன் இயோவ், இந்த மாநிலத் தேர்தலில் ‘ஒற்றுமை வேட்பாளர்கள்’ மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதை உறுதி செய்ய கடினமாக உழைப்பேன் என்று தெரிவித்தார். அவர் மாநில சட்டமன்ற (DUN) தொகுதிக்கு போட்டியிடுவது இம்முறை இறுதியாக இருக்கக்கூடும், என்றார்.
N26 பாடாங் கோத்தாவுக்கான PH இன் வேட்பாளராக உறுதி செய்யப்பட்ட பின்னர், வேட்பாளர் மனு தாக்கல் மையமான ஸ்ரீ பினாங்கு அரங்கம் அருகாமையில் உள்ள தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.
“2008 இல், நான் பாடாங் கோத்தா (DUN) தொகுதியில் வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இதுவரை மூன்று தவணை பணியாற்றினேன்.
“இது கடைசி தேர்தலாக இருந்தாலும், இந்தத் தொகுதியில் (பாடாங் கோத்தா) மட்டுமன்றி, அனைத்து PH மற்றும் ஒற்றுமை வேட்பாளர்களும் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய தீவிரமாகக் கவனம் செலுத்தி கடுமையாக உழைக்க வேண்டிய தேர்தல் இது என்று நினைக்கிறேன்,” என்று ஜனநாயக செயல் கட்சியின் (டி.ஏ.பி) தலைவருமான சாவ் இவ்வாறு விளக்கினார்.
மேலும், N28 கொம்தார் மற்றும் N27 பெங்காலான் கோத்தா ஆகிய இடங்களில் முறையே போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட தே லாய் ஹெங் மற்றும் வோங் இயூ ஹர்ங்
ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று அதிகாரப்பூர்வமாக பினாங்கு மாநில 15வது சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. எனவே, பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய இணக்கம் கொண்டுள்ளதாக,”
பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டு டி.ஏ.பி பொதுச் செயலாளரின் அரசியல் செயலாளராக, அரசியல் களத்தில் கால் தடம் பதிக்கத் தொடங்கினேன்.1990-ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து எட்டு முறை தேர்தலில் போட்டியிட்டு,
1995-ஆம் ஆண்டு மட்டுமே பெங்காலான் கோத்தா தொகுதியில் தோல்வியைத் தழுவினேன்.
12-வது பொதுத் தேர்தலின் போது, மார்ச் 8, 2008 இல், கொன் இயோவ் தஞ்சோங் நாடாளுமன்றத் தொகுதியையும், பாடாங் கோத்தா மாநில சட்டமன்றத் தொகுதியையும் வென்றார்.
அந்த நேரத்தில், மக்கள் கூட்டணி (இப்போது PH என அறியப்படுகிறது) ஒரு புதிய மாநில அரசாங்கத்தை நிறுவுவதில் வெற்றிப் பெற்றது.மேலும் கொன் இயோவ் உள்ளூர் அரசாங்கம், போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ளத் தணிப்பு ஆகியவற்றின் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 15வது பொதுத் தேர்தலில், (19 நவம்பர் 2022) PH மக்கள் ஆணையை வெற்றிகரமாகக் கைப்பற்றியப் பிறகு, கொன் இயோவ் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
“இந்தத் தேர்தலில் இரண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சுயேச்சையாக இயங்கும் கட்சி உறுப்பினர்கள் இருப்பது சாத்தியமே; இந்தப் பகுதியில் அது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால், எங்களின் வளங்கள் எல்லா மட்டங்களிலும் இருப்பதால், இதுபோன்ற பிரச்சனைகளை (அதாவது கட்சியின் புறக்கணிப்பு) எதிர்கொள்ளாமல் இருக்க பகிர்ந்தளிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
இந்தப் பொதுத் தேர்தலில் இறுதியாகப் போட்டியிட்டாலும் அதன் வெற்றியை உறுதிச் செய்ய வேண்டும். அனைத்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்.
அதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘ஒற்றுமை’ முதலமைச்சர் வேட்பாளரான கொன் இயோவ், தேசிய முன்னணியின் 6 பேர் உட்பட 40 ஒற்றுமை வேட்பாளர்களும் இம்முறை மாநில சட்டமன்றத் தேர்தலில் கடினமாக உழைத்து வெற்றியைத் தக்க வைக்கப் பாடுப்படுவோம், என்றார்.