புக்கிட் தம்புன் – பினாங்கு மாநில ஜனநாயக செயல் கட்சி (டி.ஏ.பி) பினாங்கு மாநிலத் தேர்தலின் போது கட்சியிடையே உட்பூசலைத் தவிர்ப்பதற்காக தற்போதைய மற்றும் புதிய வேட்பாளர்களை உள்ளடக்கிய பிரச்சார செயல்முறையை மீண்டும் ஒருங்கிணைக்கப்படும்.
ஐ.செ.க கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கின் வலுவான ஆதரவாளர்கள் மத்தியில் புதிய முகங்கள் இடம்பெறுகிறது என கூறப்படுவதை குறித்து கருத்து கேட்டபோது அதன் கட்சியின் மாநில தலைவர் சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.
பினாங்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரான கொன் இயோவ், தற்போது ஐ.செ.க உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ‘ஒற்றுமை’ எனும் குடையின் கீழ் போட்டியிடுபவர்களை வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம், மாநில அரசாங்கத்தை மீண்டும் அமைக்க முடியும்.
“வேட்பாளரை மாற்றும்போது இந்த விஷயம் (கட்சியில் உள் புறக்கணிப்பு) பொதுவானது, இதை நன்றாக நிர்வகிக்க வேண்டும்.
“எனவே, நாங்கள் பினாங்கு ஐ.செ.க தரப்பில் இந்த மாற்றத்தை, தற்போதுள்ள பதவியில் இருப்பவர்களுக்கான மட்டத்தில் இருந்து, அந்தப் பகுதிக்குப் புதியவர்களாகப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்கள் வரை நிர்வகிப்போம்.
“மேலும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் கவனம் செலுத்தி வெற்றிப் பெற ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,”என சாவ் பண்டார் காசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
கட்சி மட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் புதிய முகங்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தோற்றம் சாதாரணமானது என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
“ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் மாற்றங்கள் நடைபெறுவது இயல்பு ஆகும்.
“ஐந்தாண்டுகளில் (15வது தேர்தல் பதவிக்காலம் முடிந்த பிறகு) எனது பெயர் இல்லை என அறிவிப்பு வந்தால், அதுதான் ஒவ்வொரு தேர்தலின் இயக்கவியல் ஆகும். அதாவது, வயதானவர்களுக்கும்,தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும் அதேவேளையில், புதிய முகங்களுக்கும் புதிய வாய்ப்புகள் வழங்கப்படும்.
“நான் குறிப்பிட்டுள்ளபடி, இந்த வேட்பாளர் பட்டியல் ஐ.செ.க கட்சி தரப்பில் முடிவு செய்யப்பட்டது. எனவே அனைத்து கிளை உறுப்பினர்களையும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வெற்றிப் பெறுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று சாவ் விளக்கினார். அதற்கு முன் பினாங்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சிக்கு மீண்டும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநில அளவில் முக்கிய தூணாக விளங்கும் DAP மற்றும் PH இன், ஒற்றுமை தேர்தல் இயந்திரத்துடன் இணைந்து, PRNக்குப் பிறகு மாநில அரசாங்கத்தை நிறுவுவதற்கான வெற்றிகரமான ஆணையைப் பாதுகாக்க முயற்சிப்பதாகக் கூறினார்.
பினாங்கில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் 2018 முதல் 2023 வரை பாடுபட்ட அனைத்து மாநில அரசு நிர்வாக அதிகாரிகளுக்கும் கொன் இயோவ் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கு திருப்திகரமான செயல்திறனை அடைய என்னுடன் இணைந்து பணியாற்றியதற்காக 2018 முதல் 2023 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஆட்சிக்குழுவிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கடந்த ஐந்தாண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொண்டதோடு. மேலும் கடந்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியது மற்றும் பினாங்கு2030 இலக்கை அறிமுகப்படுத்தியது என்பது பதிவு செய்யவேண்டிய முக்கிய கூறுகளாகும்.
“ஐ.செ.க கட்சியில் இருந்து பெயரிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் மட்டுமல்ல, ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்து வேட்பாளர்களும் இந்த பினாங்கு மாநிலத் தேர்தல் வெற்றியை அடைய முடியும் என்பதை நான் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் விளக்கமளித்தார்.