தேசிய முன்னணி அரசு அங்கீகரித்த நில பயன்பாடு மீட்புத் திட்டத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி தரப்பினர் விடுத்த பரிந்துரையைப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் நம்பிக்கை கூட்டணி அரசு இத்திட்டத்தை ஒத்தி வைக்க உடன்பாடு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட மேம்பாட்டுத் தரப்பினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க நேரிடுவதோடு மாநிலமே திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும்.
இப்பரிந்துரையை நிராகரிக்க 23 நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்த வேளையில், 1 ஜனநாயக செயல் கட்சி(ஐசெகா) உறுப்பினர் மற்றும் 5 மக்கள் நீதி கட்சி (பிகேஆர்) உறுப்பினர்களின் நிலைப்பாட்டினைக் குறித்து கேள்வி எழுப்பினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
“மாநிலத்தைத் திவாலாகும் நிலைக்குக் கொண்டு செல்ல மக்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை” என்றார் முதல்வர்.
பினாங்கு மாநிலம் திவாலாகுவதைத் தவிர்ப்பதோடு கூடுதல் பொருளாதாரத்தை வலுப்படுத்தி பொது வசதி மேம்பாடு, கல்வி மற்றும் புத்தாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் லிம் குவான் எங்.
நம்பிக்கை கூட்டணி அரசாங்க முடிவிற்கு ஒப்புதல் வழங்காத ஐந்து பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களான ஒங் சின் வென்(புக்கிட் தெங்கா), டாக்டர் நோர்லேலா அரிப்பின் (பெனாந்தி), சே கா பேங்(கேபுன் பூங்கா), டாக்டர் ஜெயபாலன்(பத்து உபான்) மற்றும் லீ காய் லூன் (மாச்சாங் புபு) இடம்பெறுகின்றனர். இருப்பினும் ஐசெகா சட்டமன்ற உறுப்பினர் தே ஈ சியூ தனது தவற்றை உணர்ந்து கட்சியிடம் மன்னிப்புக் கேட்டார். ஆனால் ஒப்புதல் வழங்காத ஐந்து பீகேஆர் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இப்பரிந்துரைப் பற்றி விவாதம் செய்ய முன் வரவில்லை. மாநில பிகேஆர் கட்சியில் உயர் தலைவர்களிடம் கூட அவர்களின் முடிவுகளைப் பற்றி கலந்தாலோசிக்கவில்லை.
கடந்த 6/11/2015-ஆம் நாள், மாநில முதல்வர் அறிவித்த வரவுச்செலவு திட்டத்தில் மாநில அரசு இதுவரை 60 ஏக்கர் நிலம் மட்டுமே நில பயன்பாடு மீட்புத் திட்டத்திற்குப் பயன்படுத்திய வேளையில், முன்னாள் தேசிய முன்னணி ஆட்சியில் 3,241 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னணி ஆட்சியில் அங்கீகரித்த 3,241 ஏக்கர் நில பயன்பாடு மீட்புத் திட்டத்தை ஒத்திவைக்குமாறு பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் முகமது பாரிட் தமது தொகுப்புரையில் பரிந்துரைத்தார்.
இதனால் பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணி அரசாங்கமே அதன் இழப்பீட்டைச் செலுத்த நேரிடுமே தவிர தேசிய முன்னணி அல்ல எனச் சுட்டிக்காட்டினார் மாநில முதல்வர்.}