மாநிலம், நாட்டின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களின் செயல்திறன் மேம்பாடுக் காண வேண்டும் – பிரதமர்

மெர்மாத்தாங் பாவ் – மலேசியா முன்னேற கால அவகாசம் தேவை என்றும் தற்போதைய செயல்திறனுடன் நாடு முன்னேற்றம் காண முடியாது.
என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

“நாட்டைக் காப்பாற்றவும், மலேசியாவை ஒரு சிறந்த தேசமாக மாற்றவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எனவே, பொதுத் துறை சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும்,” என்று அன்வார் கூறினார்.

சவாலான தருணங்களில் பொதுத் துறை நிதி நிர்வாகத்தில் விவேகத்துடன் இருக்க வேண்டும். மேலும், தேவையான கூறுகளில் கவனம் செலுத்தி பொதுப்பணித் துறையில் சேமிக்க இணக்கம் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வலுவான தேசத்தை உருவாக்க முன்னெத்துச் செல்கிறோம்.

“அரசு ஊழியர்களில், குறிப்பாக கீழ்மட்டக் குழுவின் வருமானம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றதாக இல்லை என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

“நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டவுடன் அரசு ஊழியர்களின் ஊதியங்கள் மதிப்பாய்வு செய்யப்படும், உறுதியாக இருங்கள்,” என்று அவர் கூறினார்.

தனது நிர்வாகம் வறுமையை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது, என அன்வார் கூறினார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடரப்போவதாக அன்வார் பொதுப்பணித் துறை ஊழியர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

“மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஊழிலில் ஈடுபடும் தரப்பினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அறிவுறுத்தியுள்ளேன்,” என இன்று UiTM மெர்மாத்தாங் பாவ் தலத்தில் நடைபெற்ற பினாங்கு அரசு ஊழியர்களுடனான சந்திப்பின் போது, இதனை தெரிவித்தார்.

பினாங்கு முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது உரையில், ஊழலில் ஈடுபட வேண்டாம் என்று பொது ஊழியர்களுக்கு நினைவூட்டினார்.

“ஊழலை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

“பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு ஊழலை எதிர்த்து நல்லாட்சியை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சிந்தனையில் உருவான மலேசிய மடானியின் கருத்தை ஆதரிப்பதில் மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சாவ் வெளிப்படுத்தினார்.

“கூட்டரசு அரசாங்கத்தைப் போலவே பினாங்கு மாநிலமும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்த வலுவான ஒத்துழைப்பால் கூடுதலான வெற்றியை உருவாக்க முடியும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு பொது ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று சாவ் கூறினார்.

“ஒரு முற்போக்கான மற்றும் விவேகமான அரசாங்கத்தை உருவாக்க அரசு ஊழியர்கள்
எப்போதும் மற்ற நலன்களை விட நாட்டின் நலன்களில் முன்னிறுத்தி ஆதரவு அளிக்க வேண்டும்.

“அரசு ஊழியர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப தங்களின் அறிவுத் திறன் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்த முனைப்புக் காட்ட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் திறன்மிக்க அரசு ஊழியர்கள் நாட்டின் சொத்தாக திகழ்கின்றனர்.

“அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள புத்தாக்க மிக்க மற்றும் புதுமையான வழியில் தீர்வுகள் காண்பது அவசியம்,” என்று சாவ் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்புக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ முகமட் ஸுகி அலி, பொதுச் சேவை இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமது, பினாங்கு சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லா சூ கியாங், பினாங்கு துணை முதல்வர் டத்தோ அஹ்மட் ஜாக்கியுடின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி மற்றும் பினாங்கு மாநில செயலாளர் டத்தோ முகமட் சாயுத்தி பாக்கர் கலந்து கொண்டனர்.