ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் ரிம2.27 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில், பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் 10 திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும், என்றார்.
நிலம் & பொருளாதார மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், இன்று ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெற்ற பொதுச் சேவை ஊழியர்கள் உடனான சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
“12-வது மலேசியத் திட்டம் (RMK-12),
2023 ஆண்டின் மூன்றாவது ‘Rolling’ திட்டத்தின் (RP3) கீழ், பினாங்கு மாநில அரசாங்கம் 126 மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு கொண்டுள்ளது. இதன் மொத்தச் செலவு ரிம17.72 பில்லியன். அதேவேளையில், 2023 ஆம் ஆண்டிற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு ரிம2.89 பில்லியன் ஆகும்.
“மாநில அரசாங்கம் பட்டியலிடப்பட்ட 126 திட்டங்களில், 10 பிரதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தேசிக்கிறது,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.
பினாங்கு2030 இலக்கை வெற்றியடையச் செய்வதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அனைத்து 3,920 பொதுச் சேவை அரசு ஊழியர்களின் முன்முயற்சிகளையும் நேர்மையையும் கொன் இயோவ் பாராட்டினார்.
மேலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூட்டரசு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் கொள்கிறது.
“பொதுச் சேவை ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் கடமை உணர்ச்சி மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யத் துணைபுரிகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் சயுத்தி பாக்கர் தனது உரையில், மாநில பொதுச் சேவை துறை தொடர்ந்து அரசாங்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் பினாங்கு2030 இலக்கை முன்னெடுத்துச் செல்லும்.
இந்தச் சந்திப்புக் கூட்டத்தில், பினாங்கு மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; முதலாம் துணை முதல்வர் டத்தோ அஹ்மத் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் ப.இராமசாமி; சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தேசிய அளவிலான விருதுகள் மற்றும் அங்கீகாரத்திற்கான மாதிரி காசோலைகளை பல தொடர்புடைய அரசு துறைகளுக்கு முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.