ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. கல்வியின் வளர்ச்சிக்காக பல முன்னெடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்க பினாங்கு கிளை உறுப்பினர்கள் மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.
பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கி வரும் ஆதரவை மாநில முதலமைச்சர் கோடிட்டுக் காட்டினார். இச்சங்கம் முன் வைத்த கோரிக்கைகள் ஆலோசிக்கப்படும் என சாவ் இச்சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்தப்போது குறிப்பிட்டார்.
மலேசிய முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் இச்சங்கம் சேவையாற்றி வருவதை மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்க பினாங்கு கிளையின் தலைவர் வேலாயுதம் குறிப்பிட்டார்.
பினாங்கில் பிரத்தியேகமாக ஒரு அலுவலகத்தை அமைக்க உதவும் நோக்கில் மாநில அரசாங்கத்திடம் நிலம் ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், வருடாந்திர மானியமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மாநில முதலமைச்சரிடம் இவர்கள் முன்வைத்தனர்.
இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கம் தேசியத் தலைவர் டத்தோ கிருஷ்ணன், துணை தலைவர் குமரன் மாரிமுத்து, பினாங்கு கிளை செயலாளர் இராஜேஸ்வரி, பினாங்கு கிளை துணைத் தலைவர் வீரைய்யா கோபால், மற்றும் இதர உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்