மாநில அரசின் சேவை அளப்பரியது

பினாங்கு மாநில ஜாவித் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஏறக்குறைய 79 ஆண்டுக் காலமாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 11-7-2013-ஆம் நாள் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ இப்பள்ளிக்கு வருகையளித்தார். இப்பள்ளியின் 300 மாணவர்களுக்கும் எழுது பொருட்களைத் தனது பொற்கரத்தால் வழங்கினார். மேலும் ஜாவி சட்டமன்ற உறுப்பினரான சூன் லிப் சீ அவர்கள் ரிம 500 மதிப்புடைய காசோலையை முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் பள்ளி வாரியக் குழுத் தலைவருமான திரு பி.எஸ் மணியத்திடம் வழங்கினார். இந்நிதி யூ.பி.எஸ்.ஆர் தேர்வு அணுகுமுறை கருத்தரங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் திரு பி.எஸ் மணியம்.

ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ அவர்கள் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வியே அடித்தளம் என்பதால் அதனைப் பெறுவதற்கு சிரமப்படும் மாணவர்களுக்கு தாம் உதவ முன்வருவதாகச் செய்தியாளர் கூட்டத்தில் சூன் லிப் சீ அவர்கள் தெரிவித்தார். ஜாவித் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜாவி வட்டாரத்தில் எழுது பொருட்கள் பெறும் நான்காவது தமிழ்ப்பள்ளி என எடுத்துரைத்தார் சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ.

மேலும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்து வரும் மாநில அரசு இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் வித்திடுகிறது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளியின் நிதி ஒதுக்கீட்டில் இப்பள்ளிக்கு ரிம 19 549 வழங்கப்பட்டது. அதோடு மக்கள் கூட்டணி அரசின் மூலம் கனிணி அறை அமைக்கப்பட்டதோடு 20 கனிணி வழங்கப்பட்டன. இப்பள்ளியின் அனைத்து கட்டடங்களும் புது பொலிவுடன் காண்பதற்கு வர்ணம் பூசியதோடு பாதுகாப்பு அம்சம் கருதி கம்பியமைப்புடன் கதவும் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்கள் நலன் கருதிய மாநில அரசு மாணவர்களுக்காகக் கூடாரம் அமைத்துள்ளது.

மேலும் பெற்றோர் ஆசிரிய சங்க முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட பாலர் பள்ளி கட்டிட நிதிக்கு பினாங்கு மாநில  இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி அவர்கள் நிதியுதவி வழங்கியதோடு 2010-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இப்பள்ளியின் சோதனைகளும் வேதனைகளும் மாநில அரசின் அக்கறையினாலும் ஈடுபாட்டாலும் சூரியனைக் கண்ட பனி போல ஒவ்வொன்றாக விலகி வருகிறது என்றார் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி சாந்தி தேவி அவர்கள்.

சிற்றுண்டித் தினக் கொண்டாட்டம்
சிற்றுண்டித் தினக் கொண்டாட்டம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்ந்து இப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக கடந்த 14-7-2013-ஆம் நாள் சிற்றுண்டித் தினம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் வாயிலாக வசூலிக்கப்படும் நிதியானது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும். புகழ் பெற்ற மோட்டார் சைக்கிள் வீரரும் மலேசிய கின்னஸ் சாதனையாளருமான பி நடராஜன் மற்றும் சக மோட்டார் சைக்கிளோட்டிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிதித் திரட்ட உதவினர் என்றால் மிகையாகாது.