மாநில அரசு அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டது

Admin

ஜார்ச்டவுன் – “பினாங்கு மாநில அரசாங்கம் 2018-ஆம் ஆண்டு 14வது பொதுத் தேர்தல் அறிக்கையில் அளித்த 68 வாக்குறுதிகளில் 90 விழுக்காடு நிறைவேற்றியது. பொது மக்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இம்மாநிலத்தில் ஆட்சியை அமைக்க அங்கீகாரம் வழங்கிய நன்னாளாக இது திகழ்கிறது.

 

மாநில அரசு அளித்த 68 வாக்குறுதிகளில், 54 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; 12 நடைமுறையில் உள்ளன. மேலும், இரண்டு வாக்குறுதிகள் மத்திய அரசாங்கத்தின் திட்டங்களுடன் இணைவதால் அது நிறைவேற்றப்படவில்லை,” என்று பினாங்கு மாநில அரசின் 2018 வாக்குறுதி அறிக்கையின் சாதனை வெளியீட்டு விழாவில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு தெரிவித்தார்.

“மாநில அரசு பொது மக்களின் சமூகநலனுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது.

“நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடின உழைப்பு மற்றும் ஒன்றிணைந்து செயல்பட்டதன் மூலம், தேர்தல் அறிக்கையில் 90 விழுக்காட்டை எட்ட முடிந்துள்ளது,” என முதல்வர் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத 10 விழுக்காடு வாக்குறுதிகள் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இன்னும் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று கொன் இயோவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“இருப்பினும், உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்டத் திட்டங்கள் போன்ற சில வாக்குறுதிகள் செயல்படுத்த நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநில சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

கோவிட்-19 தொற்றின் சவாலை எதிர்கொண்ட இரண்டு ஆண்டுகளில், பினாங்கு மாநில அரசு பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, கல்வி, விளையாட்டு மற்றும் சமூக வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ‘நான் பினாங்கை நேசிக்கிறேன்’ என்ற தேர்தல் வாக்குறுதிகளில் 11 குறிக்கோள் செயல்படுத்த உத்வேகம் கொண்டது. அவை ஆற்றல், திறன், வெளிப்படையான (CAT) நிர்வாகம்; அனைவருக்குமான வீடமைப்புத் திட்டம்; தொழில் முனைவர் திட்டம்; அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்; பசுமை மாநிலம்; கல்வி மற்றும் திறன் மேம்பாடு; சுற்றுலா, கலாச்சாரம், கலை, பாரம்பரியம் மற்றும் விளையாட்டு; சமூலநலன் மிக்க மாநிலம்;இஸ்லாம் மற்றும் பல்லின சமூக மேம்பாடு ஆகும்.