மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டு தலங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்

Admin
img 9782

மாநில அரசு இஸ்லாம் அல்லாத வழிப்பாட்டு தலங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான நிதியம் (RIBI) மூலம் மொத்தம் ரிம1,730,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது என்று சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் தெரிவித்தார்.

பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் இயூ ஹார்ங் தொடுத்த வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த லிம், RIBI நிதியம் மூலம் 43 வழிபாட்டுத் தலங்களுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டது, என்றார்.

“மொத்தம் 55 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அவற்றில் 43 ‘RIBI அறக்கட்டளை நிதியம் வழிக்காட்டிக்கு’ (TARIBI) இணங்க வழிபாட்டுத் தலங்களின் தேவைகளின் அடிப்படையில் மதிப்பீட்டிற்குப் பிறகு இக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.

“இது நிலம் மற்றும் கட்டிடத்தின் நிலை மட்டுமின்றி அந்நிறுவனத்தின் பதிவு பற்றிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பாய்வுகளையும் உள்ளடக்கியது” என்று லிம் கூறினார்.

இந்நிதி ஒதுக்கீடு வழிபாட்டு தலங்களின் சீரமைப்புப் பணிகள், பராமரிப்பு மற்றும் RIBI தலங்களை நிறுவுதல் ஆகியவற்றிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று லிம் கூறினார்.

இந்த ஒதுக்கீடு பக்தர்களின் பிரார்த்தனைகள், மத நடவடிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்களுக்காக நிறுவப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

RIBI நிதியம் அதன் கட்டிடத்தை மறுசீரமைத்தல், கூரை மற்றும் மழைநீர் கசிவுகளைச் சரிச்செய்தல், சுவர் விரிசல் மற்றும் பழிங்கு தரையை சரிச்செய்தல், வடிக்கால் அமைப்பை சரிச்செய்தல், வேலி பழுது மற்றும் நிறுவல், மின்னணு அமைப்பு மற்றும் மின்சுற்றுகளைப் புதுப்பித்தல் மற்றும் அவசர உதவியை வழங்குதல் ஆகிய விவகாரங்களுக்கு உபயோகிக்கப்படும்.

“வோங்கின் துணைக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, 100 ஆண்டுக்கு மேற்பட்ட RIBI தலங்கள், அனுமதி அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தலங்களும் பழுதுப்பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்நிதி வழங்க பரிசீலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

“நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு முன்னதாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து தொடர்புடைய அதிகாரிகள் அத்தலத்தைப் பார்வையிடுவார்கள்,” என்று லிம் கூறினார்.

வழிபாட்டு தல நிர்வாகத்தினர் RIBI நிதி ஒதுக்கீடு பெற , மலேசியா பதிவாளர் மத அமைப்புகள் (ROS) கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது மலேசிய அரசாங்க அரசிதழின் கீழ் நிறுவப்பட்டு eRIBI அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும், என்றார்.

மேம்பாட்டாளர்களால் ஒதுக்கப்படும் RIBI நிலம் நிறுவுவதற்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும் என்றும் லிம் கூறினார்.