ஜோர்ச்டவுன் – கடந்த ஆண்டு இன்று (15 செப்டமபர் 2017) பினாங்கு மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டன. இருப்பினும் முன்னால் அரசாங்கத்தால் சுங்கை பினாங் ஆற்றின் வெள்ள நிவாரணத் திட்டம் நிராகரிக்கப்பட்ட வேளையில் தற்போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தால் சுங்கை பினாங் ஆற்றின் வெள்ள நிவாரணப் பணிகள் வருகின்ற ஏப்ரல் தொடங்கப்படவுள்ளது” என அகம் மகிழ உள்ளூராட்சி, வீடமைப்பு, கிராமப்புற & நகர்புற மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
கூட்டரசு அரசாங்கம் சுங்கை பினாங் வெள்ள நிவாரணத் திட்டத்திற்கு ரிம600 கோடி நிதி ஒதுக்கீடுச் செய்துள்ளது. இத்திட்டம் நீண்ட கால திட்டம் என்பதால் தொடக்கமாக ரிம150 கோடி வழங்கி வெள்ள நிவாரணப் பணிகள் செயல்படுத்தப்படும்.
பினாங்கு மாநில அரசு வெள்ள நிவாரணத் திட்டங்களை அமல்படுத்த தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கி வருகிறது என்பது வெள்ளிடைமலையே. மாநில அரசு 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு குறுகிய கால திட்டத்தின் அடிப்படையில் 12 வெள்ள நிவாரணத் திட்டங்களை அமல்படுத்தவுள்ளன. இந்த வெள்ள நிவாரணத் திட்டம் ரிம17 கோடி பொருட்செலவில் அமல்படுத்தவிருப்பதாக ஜெக்டிப் தெரிவித்தார். இந்தக் குறுகிய கால திட்டத்தில் சுங்கை ஜெலுந்தோங் வெள்ள நிவாரணப் பணியும் இடம்பெறும்
இந்த வெள்ள நிவாரணத் திட்டத்தில் வெள்ளப் பாதுகாப்பு அமைப்புகள் நிர்மாணித்தல், நீர் கட்டுப்பாட்டு வாயில்கள், பாலங்கள், உட்புற வடிகால், வெள்ள நீர்த்தேக்கங்கள், கழிவுகள் மற்றும் வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.