ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் குறைக்கடத்தி துறையில் மாநிலத்தின் போட்டித்தன்மையை உறுதிச்செய்வதில் நிலைப்பாடுக் கொள்கிறது.
இந்த இலக்கினை அடைய ஏழு உத்திகளை மாநில அரசு வகுத்துள்ளது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“முதல் உத்தியாக முன்-இறுதி உற்பத்தி உபகரணங்களின் மேம்பாடு மட்டுமின்றி உள்ளூர் நிறுவனங்களிடையே ஆராய்ச்சி & மேம்பாடு (R&D) மற்றும் வடிவமைப்பு & மேம்பாடு (D&D) செயல்பாடுகளை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.
“இரண்டாவது உத்தி, பினாங்கு ஒரு ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் அரசியல்) சார்ந்த மாநிலமாக மாறுவதற்கான இலக்கை அடைவதை உறுதிச்செய்வதாகும்.
“ஏனெனில், குறைக்கடத்தி துறையில் முதலீட்டாளர்கள் முதலீடுச் செய்வதற்கு ESG முக்கியக் கூறாக அமைகிறது. இது முதலீட்டுத் தளத்தை தேர்ந்தெடுக்கத் துணைப்புரிகிறது.
“மூன்றாவது உத்தியாக மாநில அரசு, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (PDC) மூலம் பண்டார் காசியா தொழில்நுட்பப் பூங்கா (BCTP), பத்து காவான் தொழிலியல் பூங்கா 3 (BKIP3) மற்றும் தெற்கு பினாங்கு அறிவியல் பூங்கா போன்ற அனைத்துலக தரம் வாய்ந்த தொழில்துறை பூங்காக்களை 852 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளது.
“இது உள்ளூர் மற்றும் அனைத்துலக முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் எங்களின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது,” என இன்று நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற அமர்வில் மாச்சாங் பூபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ கை லூன் கேட்ட வாய்மொழி கேள்விக்கு சாவ் இவ்வாறு பதிலளித்தார்.
நான்காவது உத்தியாக தற்போதைய மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக மாநில அரசு ‘Hand Holding Programme’ எனும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது, என்றார்.
“பாயான் லெப்பாஸ் தொழில்துறை பூங்காவில் ‘integrated circuit’ (IC) வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பூங்காவிற்கான எங்கள் திட்டங்களையும் நாங்கள் அறிவித்துள்ளோம். இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு மில்லியன் சதுர அடி கொண்ட பிரமாண்ட அலுவலக இடத்தை உருவாக்க இயலும்.
“42.5 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட இத்திட்டம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பிரிவில், GBS By The Sea மற்றும் GBS TechSpace, ஆகிய இரண்டு முன்னோடி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது மொத்தம் ரிம347 மில்லியன் செலவில் 350,000 சதுர அடி பிரமாண்ட அலுவலக இடத்தைக் கொண்டிருக்கும்.
“இதற்கிடையில், பூங்காவின் இரண்டாவது பிரிவில் GBS@TechnoPlex எனும் கட்டிடத்தை நிறுவுகிறது. இது ரிம308 மில்லியன் செலவில் இத்திட்டத்திற்கு கூடுதலாக 500,000 சதுர அடி இடமளிக்கிறது,” என்று அவர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறினார்.
ஆறாவது உத்தியின் கீழ், மாநில அரசு பினாங்கு எதிர்கால அறக்கடளை உபகாரச்சம்பளம் மற்றும் பினாங்கு ஜி.பி.எஸ் தொழில்துறை அகாடமி போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது ஏற்கனவே இருக்கும் திறமைகளைத் தக்க வைத்துக்கொள்ளவும் மேம்படுத்தவும் மற்றும் மாநிலத்தில் புதிய திறமைகளை ஈர்ப்பதற்காகவும் துணைபுரியும் என சாவ் குறிப்பிட்டார்.
ஏழாவது உத்தியாக, பினாங்கில் முதலீடுச் செய்யக்கூடிய முதலீட்டாளர்களுடன் சந்திப்புக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தி பினாங்கை வெளிநாட்டிலும் விளம்பரம் செய்வதாகும்.
“பினாங்கில் முதலீடுச் செய்ய அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீதும் கவனம் செலுத்தப்படும்,” என்று சாவ் விவரித்தார்.
IC வடிவமைப்பு திட்டத்திற்காக சிலாங்கூர் அரசாங்கம் பெற்ற மானியம் போன்று பினாங்கு மாநில அரசு பெறுவதற்கு எப்போது விண்ணப்பிக்கும் என ஆயிர் பூத்தே சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் இன் துணைக் கேள்விக்கு இத்திட்டம் குறித்த சில தொகுப்புகள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன மற்றும் விரைவில் அறிவிக்கப்படும் என
சாவ் பதிலளித்தார்.
“அதே வேளையில், பாயான் லெபாஸ், பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC) கட்டிடத்தில் பினாங்கு சிப் டிசைன் அகாடமியை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ளோம்.
“IC வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் பூங்காவின் வளர்ச்சிக்கான மாநிலத்தின் திட்டத்தை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.