இவ்வாண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 16-வது சுக்மா போட்டியில் பினாங்கு மாநில வெற்றியாளர்களின் சாதனை அளப்பரியது. இதனை அங்கீகரிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு வெற்றியாளர்கள் அனைவருக்கும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கியது. இந்த நிகழ்வு கொம்தாரில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், முதலாம் துணை முதல்வர் டத்தோ முகமது ரஷிட் பின் அஸ்னோன், மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த 28 ஜூன் – 7 ஜூலை வரை நடைபெற்ற சுக்மா போட்டியில் பினாங்கு மாநில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்ற 24 போட்டிகளில் 17 போட்டியில் போட்டியாளர்கள் பதக்கம் வென்றது பாராட்டக்குறியதாகும். வெற்றியாளர்கள் ஜப்பானிய மற்போர்(Judo), சிலம்பம், கத்தி சண்டை, ஒருங்கிணைப்பு நீச்சல், பிங் பாங், குதிரைச்சவாரி, மென்பந்தாட்டம்(Softball), ஃபுட்சல், கிரிக்கெட், வுட்பால்(Woodball) போன்ற போட்டிகளில் 8 தங்கம், 19 வெள்ளி, மற்றும் 21 வெங்கல பதக்கத்தை வென்று பினாங்கு மாநிலத்திற்கு நற்பெயரை ஈட்டித் தந்தனர்.
வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் வகையிலும் மாநில அரசு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தது. பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் இந்த ஊக்கத்தொகை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். இதன்வழி இன்னும் அதிகமான விளையாட்டாளர்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 19 ஜூலை 2013-யில் ஒதுக்கப்பட்ட நிதியான ரி.ம123,400-லிருந்து 50% வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, உறுதியளித்தப்படி 50%-மான ரிம 61,700.00 இம்முறை வழங்கியதாக மேலும் கூறினார்.
போட்டி விளையாட்டுகளில் ஈடுப்படுவதன் மூலம் தரமான, சுகாதாரமான சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்றார்.