பத்து காவான் – பினாங்கு மாநில அரசாங்கம் குறைந்த கார்பன் மற்றும் நிலையான சக்தி கொண்ட எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக சூரிய ஒளிமின் அழுத்த அமைப்பு (PV) தொழில்நுட்பத்தை அமல்படுத்த உறுதிபூண்டுள்ளது என்று பராமரிப்பு அரசாங்க முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
சூரிய ஒளிமின் அழுத்த அமைப்பு (PV)
தொழில்நுட்பத்தை இன்று பத்து காவான் தொழிற்பேட்டையில் உள்ள மாரெல்லி ஆட்டோமோட்டிவ் லைட்டிங் மலேசியா சென் பெர்ஹாட்
(Marelli Automotive Lighting Malaysia) நிறுவனத்தில் தொடங்கி வைப்பதற்கு முன் தனது உரையில் சாவ் இவ்வாறு கூறினார்.
“பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உலகளாவிய சவால்கள் மற்றும் அதனால் ஏற்படும் தொலைநோக்கு விளைவுகளை ஒப்புக்கொள்வது அவசியமாகும்.
“பருவநிலை மாற்றம் என்பது சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல, அது நமது பொருளாதாரம், சமூகம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக அமைகிறது.
“இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் அவசர மற்றும் கூட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
“இன்றையத் திட்டத்திலிருந்து, ஆண்டுதோறும் 4,382 மெகாவாட் (megawatts) தூய்மையான ஆற்றல் உற்பத்தியை செய்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் இது நமது மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் மகத்தான ஆற்றலுக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகிறது. அதே நேரத்தில் இது சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கிறது,” என்றார்.
சாவ்வின் கூற்றுப்படி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் பினாங்கு அரசாங்கம் இணக்கம் கொள்கிறது.
“மாநில அரசு பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பினாங்கு பசுமை திட்டம் 2030ஐ முன்பே அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில், பினாங்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஆற்றல் திறன் பணிக்குழு (PREET) நிறுவுதல் போன்றவையும் அடங்கும்.
“மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் பினாங்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஆற்றல்-திறனுள்ள திட்டங்களின் வளர்ச்சியைக் கணிசமாக அதிகரிப்பதே எங்கள் இலக்காகும்.
பினாங்கு மேம்பாட்டுக் கழகத் (PDC) தலைவரான சாவ், சூரியசக்தியைப் பயன்படுத்தி நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு துணை நிறுவனமான Solar Voltech தனியார் நிறுவனத்தை உருவாக்க PDC தக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக, அறிவித்தார்.
” Voltech தனியார் நிறுவனம் மூலம் பினாங்கில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய மண்டல தீர்வுகளை வழங்குவதன் மூலம் பினாங்கு ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு முறையை மாற்ற இயலும் என PDC கருதுகிறது.
“இந்த தீர்வுகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் உயர்தர, திறமையான மற்றும் நம்பகமான சூரிய ஆற்றல் உற்பத்தியை உறுதி செய்கிறது,” என்று சாவ் கூறினார்.
PDC இன் துணை நிறுவனமான PDC நூசாபினா சென் பெர்ஹாட் மற்றும் சுத்தமான எரிசக்தி நிபுணர் சோலார்வெஸ்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மூலம் இன்று, 3.1 மெகாவாட் பீக் (MWp) சோலார் PV பேனல்கள் மற்றும் கட்டிட-ஒருங்கிணைந்த ஒளிமின் அழுத்த பேனல்களை கூரை மற்றும் கார்போர்ட் Marelli Automotive Lighting Malaysia நிறுவனத்தில்
வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது, என கூறினார்.
“இந்த 3.1 மெகாவாட் சோலார் பிவி அமைப்பு மற்றும் 5,727 சோலார் பேனல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கான எங்கள் பணியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இது பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், நமது குழந்தைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டைக் காண்பிக்கிறது,” என்று அவர் கூறினார்.
சூரிய சக்தி அமைப்புத் திட்டம் சமூக-பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் நிலையான வளர்ச்சியை PDC செயல்படுத்துவதாக அதன் PDC தலைமை நிர்வாக அதிகாரி அஜீஸ் பாக்கர் கூறினார்.
“தூய்மையான ஆற்றலை உருவாக்குவதோடு, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை நோக்கி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், இந்த சூரிய மின் திட்டமானது கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு வளமான பினாங்கு மாநிலத்தை உருவாக்க வழி வகிக்கிறது, என்றார்.