தைப்பூசம் என்பது தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா ஒவ்வொரு வருடம் தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் திகதி தைப்பூசத் திருநாள் உலகெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மலேசிய அளவில் பத்து மலைக்கு அடுத்து தைப்பூசத் திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தலமாகப் பினாங்கு தண்ணிர்மலை ஆலயம் திகழ்கிறது என்றால் மிகையாகாது. இத்திருத்தளத்தில் 22-வது முறையாக தைப்பூசத் திருவிழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது.
பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு நாடு முழுவதிலிருந்தும் பக்த கோடி பெருமக்கள் தங்கள் காணிக்கைகளைச் செலுத்த புற்றீசல் போல் திரண்டனர். ஏறக்குறைய 1.2 மில்லியன் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் வருகையளித்தனர்.. பினாங்கில் செட்டிப் பூசம் என்றழைக்கப்படும் தைப்பூச முதல் நாள் வெள்ளி இரத ஊர்வலம் அதிகாலை 6.00 மணிக்கு பினாங்கு வீதியில் அமையப்பெற்றுள்ள கோயில் வீட்டிலிருந்து நகரத்தார் ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டது. சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட தங்க முருகன் சிலை மிகவும் பிரமாண்டமாகக் காட்சியளித்தது. சாலையெங்கும் தேங்காய்கள் குழுமியிருக்க பக்தர்கள் கூட்டம் புடை சூழ வெள்ளி இரதம் பவனி வந்தது. இந்தியர்கள் மட்டுமன்றி, சீனர்களும் இலட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினர்.
பினாங்கு தைப்பூசத்தின் சிறப்பு அம்சமாகச் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் பந்தல்கள் திகழ்வது குறிப்பிடத்தக்கது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், பொது இயக்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சமூகப் பற்றாளர்களால் இவ்வாண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அழகிய கலை வேலைபாடுகளையும் அலங்கரிப்புகளையும் கொண்ட பந்தல்களில் மக்களின் பசி தீர்க்க அன்னதானங்களும் தாகத்தைத் தீர்க்கக் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. தைப்பூச முதல்நாள் மாலை இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயபாலன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங், கொடி மலை நாடாளுமன்ற உறுப்பினர் கீர் ஜொஹாரி ஆகியோர் தண்ணீர் பந்தல்களுக்கு வருகை புரிந்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். பந்தல் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்து வரவேற்றனர்.
தைப்பூச முதல் நாள் மாலை 6 மணிக்கெல்லாம் மக்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த தொடங்கிவிட்டனர். பால் குடங்களையும் காவடிகளையும் ஏந்தியபடி மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். முருகப்பெருமானுக்கு விரதமும் சைவமும் மேற்கொண்டு முருகனின் வாசகத்தை உரக்கக் கூறியபடி பக்தர்கள் 513 படிகளைக் கடந்து திருக்குமரனைத் தரிசிக்கச் சென்றனர். இவர்களுடன் சீனப் பெருமக்களும் இணைந்து மஞ்சள் ஆடையுடுத்தி பால் குடங்களையும் அலகு குத்தி காவடிகளையும் ஏந்தி சென்றது மெய்ச்சிலிர்க்க வைத்தது. இந்திய நாட்டுக்கு வெளியில் உள்ள தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய முருகன் ஆலயமாக எழுப்பப்பட்டுள்ள தண்ணீர் மலை பாலதண்டாயுதபாணி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருள் சூழ்ந்த அவ்விடத்தையே ஒளிமயமாகக் காட்சியளிக்க வைத்தது மக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
பக்தர்கள் மயில் இறகுகள், மலர், மற்றும் பல வித அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி காவடிகளை ஏந்தி வந்தனர். மயில் காவடி, பால் காவடி, பண்ணீர் காவடி, புஷ்ப காவடி ஆகிய பல விதமானக் காவடிகளை இந்தியர்கள் மட்டுமின்றி சீனர்களும் பக்தி மேன்மையுடன் ஏந்தி வருவதைக் காண்பதற்குச் சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டு 10000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாலதண்டாயுதபாணிக்கு மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்தினர். மலை அடிவாரத்தில் அஸ்ட்ரோ செயற்கைகோள் தொலைக்காட்சியின் மூலம் பினாங்கு தைப்பூச விழா உலக மக்களின் பார்வைக்கு நேரடி ஒளிப்பரப்புச் செய்யப்பட்டது.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பினாங்கு மாநில காவல்துறை உதவித்தலைவர் டத்தோ தெய்வீகன் தலைமையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டன.
தைப்பூசத்தன்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங்குடன் இணைந்து துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்களான மதிப்பிற்குரிய திரு தனசேகரன், திரு டேனி லாவ் ஆகியோர் மாலை 5.30 மணிக்கு மேல் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டனர். ஸ்ரீ கணேசர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் முதல்வரும் அரசு உயர்மட்டத் தலைவர்களும் மக்களைச் சந்தித்தனர். அங்கு சிறப்புரையாற்றிய முதல்வர் லிம் குவான் எங், ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் பொருள் சேவை வரி அமலாக்கம் பொது மக்களுக்கு மட்டுமின்றி நட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றார். மேலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மாநில அரசு சார்பில் ரிம200,000 மானியமாக வழங்குவதாக அறிவித்தார். பினாங்கு தண்ணீர் மலை ஆலயத்திற்கு ரிம 6.2 மில்லியன் செலவில் புதிய மின்தூக்கி மின்சுடலை இணைப்பு நிர்மாணிப்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.