பினாங்கு மாநில அரசாங்கம் மக்களுக்குப் பல அரிய உதவுகளை வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. தனித்துவாழும் தாய்மார்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனைத் தொடரும் முயற்சியில் தனித்துவாழும் தாய்மாரான முனியம்மா த/பெ நாகையா (வயது 34) அவர்களுக்கு பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் உதவித்தொகை வழங்கினார். முனியம்மாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்திவரும் அவர் வீட்டு வாடகைச் செலுத்த முடியாமல் திண்டாடினார். இவரின் பிரச்சனையைக் களையும் பொருட்டு பினாங்கு மாநில நகராண்மைக் கழகத்தின் துணையுடன் குறைந்த வாடகையில் ரிம102-க்கு ஃபிரி ஸ்கூல் அடுக்குமாடியில் ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பணம் செலுத்த உதவும் வகையில் முனியம்மாவிற்கு ரிம500-க்கான காசோலையை கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்பட்டது. அதோடு, சமீபத்தில் உலகம் முழுவதும் கொண்டாடிய தீபாவளி பண்டிகைக்கு சில அத்தியவசிய தேவைகளை வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டும் பரிசுக்கூடையும் வழங்கியது பாராட்டக்குறியதாகும். அதோடு, முனியம்மா அவர்களுக்கு பொதுமக்கள் உதவ விரும்பினால் பப்லிக் வங்கி (PUBLIC BANK) 157072322312 என்ற கணக்கு எண்ணுக்குப் பணம் அனுப்பலாம் என கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, இரண்டாம் ஆண்டு பயிலும் மோகேஸ்வரன் என்ற மாணவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரிம 55,000 தேவைப்படுகிறது. அந்த மாணவனுக்கு உதவும் பொருட்டு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதியிலிருந்து ரிம5000-மும் தமது சொந்த ஒதுக்கீட்டு நிதியிலிருந்து ரிம1000 என மொத்தமாக ரிம 6000-ஐ மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள் வழங்கினார்.