மாநில அரசு தொழில்திறன் கல்விக்கு முழு ஆதரவு அளிக்கும் – பேராசிரியர் உறுதி

Admin
  • பினாங்கு மாநில அரசு தொழில்துறை புரட்சி 4.0 -ஐ எதிர்கொள்ள ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க பல அரிய திட்டங்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும். ஏட்டுக் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் தொழிற்திறன் கல்விக்கு முழு ஆதரவை மாநில அரசு வழங்கும் என எஸ்.எல்.சி அவுட்டோமோடிவ் கற்றல் மையத்திற்கு வருகையளித்தப்போது இவ்வாறு குறிப்பிட்டார்
    இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

    “மலேசியாவில் மிக குறைவான திறன்மிக்க தொழிலாளர்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆயினும் இதனை வருகின்ற 20 ஆண்டுகளில் நம்மால் மாற்றியமைக்க முடியும்”, என சூளுரைத்தார் மாநில பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன வளர்ச்சி மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நூதன ஆட்சிக்குழு
    உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி.

  • எஸ்.எல்.சி அவுடோமொடிவ் கற்றல் மையத்தில் பயிலும் இந்திய மாணவர்கள்
  •  

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நிபுணத்துவம் மிக்க தொழிலாளர்களை உருவாக்க இம்மாதிரியான தொழில்திறன் கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களை காட்டிலும் தொழில்திறன் கல்வியில் ஆர்வம் மிகுந்த மாணவர்களே எதிர்காலத்தில் இத்துறையில் பீடுநடை போடுவர் என்பது வெள்ளிடைமலை.

    எனவே, இந்த எஸ்.எல்.சி அவுட்டோமோடிவ் கற்றல் மையம் வசதிக்குறைந்த மற்றும் கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழில்திறன் கல்வியை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதை மனதார பாராட்டினார்.

    மனித மூலதனத்தை உருவாக்க கல்வி தகுதி மட்டுமின்றி ஆற்றலும் திறமையும் கொண்ட மாணவர்களைத் தேர்வு செய்வதை மாநில அரசு உறுதிச்செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதன்மூலம், அந்நிய தொழிலாளர்களின் இறக்குமதியை வருங்காலங்களில் குறைக்க இம்மாதிரியான தொழில்திறன் மையங்கள் ஒரு மையகல்லாக அமையும் என்பது உறுதி.