சுங்கை டுவா – வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தாமான் சைன்டெக்ஸ் தாசெக் குளுகோர் பிரிவு 7, தாமான் சைன்டெக்ஸ் பிரிவு சுங்கை டுவா பிரிவு 2 மற்றும் தாமான் சைன்டெக்ஸ் சுங்கை டுவா பிரிவு 6 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்பு C3 திட்டத்தின் கீழ் 46 பெறுநர்களுக்கு வீடுகளுக்கான அனுமதி கடிதத்தை சைன்டெக்ஸ் விற்பனை அலுவலகத்தில் வழங்கினார்.
“வீட்டுவசதி இலாகாவுக்கு பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில், பினாங்கு மக்கள் வீடுகளை மலிவு விலையில் மட்டுமின்றி, பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் பெற வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு வீட்டு உரிமைக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
2030 ஆம் ஆண்டிற்குள் 220,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்க வேண்டும் என்ற பினாங்கு மாநில அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, பினாங்கில் அதிகமான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் சொந்த வீடுகளைப் பெறுவதை உறுதிசெய்ய பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் (LPNPP) மூலம் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாக சுந்தராஜு கோடிக் காட்டினார்.
இதுவரை பினாங்கில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் 157,073 யூனிட்களை (71.40%) எட்டியுள்ளது, அதாவது 50,700 யூனிட்கள் நிறைவடைந்தும், 20,249 யூனிட்கள் கட்டுமானத்திலும், மேலும் 86,124 யூனிட்கள் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப திட்டமிடல் நிலையில் உள்ளன.
சுமார் 317.9 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 4,244 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் (தரை வீடு) C3 திட்டத்தின் கீழ் வழங்கும் சைன்டெக்ஸ் நிறுவனத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், சைன்டெக்ஸ் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் பிரிவு C3 கீழ் (தாமான் சைன்டெக்ஸ் தாசெக் குளுகோர், பிரிவு 7) 367 யூனிட்களையும், தாமான் சைன்டெக்ஸ், சுங்கை டுவா பிரிவு 2 கீழ் 222 யூனிட்களையும், தாமான் சைன்டெக்ஸ் சுங்கை டுவா பிரிவு 6-இல் 240 யூனிட்களையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைன்டெக்ஸ்சின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் C3 திட்டத்தின் கீழ், அதன் வீடுகள் ரிம250,000 விற்பனை விலையில் விற்கப்படுவதால் குறைந்த நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் பினாங்கில் இரண்டு மாடி “தரை வீடு” வாங்கும் கனவை மெய்ப்பிக்கிறது என பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு பினாங்கு வீடமைப்பு வாரியத்துடன் இணைந்து ‘அனைவருக்குமான வீடு’ என்ற கொள்கைக்கு ஏற்ப பினாங்கு வாழ் மக்கள் சொந்த வீடுகள் பெற்றிருப்பதை உறுதிச் செய்ய தொடர்ந்து முன்முயற்சிகளை மேற்கொள்ளும் என்பது வெள்ளிடைமலை.
இதனிடையே, பொது வீடமைப்புப் பராமரிப்பு நிதியத்திற்காக மத்திய அரசு உள்ளூர் அரசாங்க வீட்டுவசதி அமைச்சு வாயிலாக இந்த ஆண்டு ரிம 21 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதுவே முதல் முறையாகும். இதனை மாநில அரசு பினாங்கு மாநில பொது வீடமைப்புப் பராமரிப்புகளுக்கு உபயோகிக்கப்படும்.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி பினாங்கு மாநில வீடமைப்புப் பராமரிப்பு நிதியத்திற்கு (TPMPP80) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார். கடந்த 2024 ஏப்ரல் 3, நிலவரப்படி, TPM80PP காத்திருப்புப் பட்டியலில் 93 விண்ணப்பங்கள் இடம்பெறுகிறது. இத்திட்டங்கள் செயல்படுத்த ரிம35 மில்லியன் ஒதுக்கீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.