ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில வீடமைப்பு வாரியம் (LPNPP) வாயிலாக மாநில அரசாங்கம் தற்போது வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளுக்கான (GPRMM) வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்து மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறுகையில், இளைஞர்கள் அல்லது முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் சொந்தமாக வீடுகள் பெறுவதற்கு வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்வது அவசியம், என்றார்.
“பினாங்கு மாநிலத்தின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீட்டுவசதி வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்டால், அவர்களுக்குச் சரியான மற்றும் சிறந்த வீட்டுக் கடனுதவிப் பெற நாங்கள் உதவ முடியும்.
“பினாங்கில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த, வீட்டுவசதி மேம்பாட்டாளர்களுக்கு நாங்கள் சிறப்பு சலுகைகளை வழங்குவோம். இதன் மூலம், இத்திட்டங்கள் நிலையானதாக இருக்க வழிவகுக்கும்.
“GPRMM வழிகாட்டுதல்களுக்கான மேம்பாடு மற்றும் திருத்தங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று சுந்தராஜு இன்று மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது தொகுப்புரையில் இவ்வாறு கூறினார்.
முதல் முறையாக வீடு வாங்குபவர்கள், வங்கி கடனுதவிப் பெறுவதில் சிரமம் எதிர்நோக்கினால் வீட்டுக் கடனுதவி உத்தரவாத நிறுவனம் (SJKP) கீழ் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு சுந்தராஜு வலியுறுத்தினார்.
“SJKP என்பது மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாகும். இது ரிம500,000 மதிப்புள்ள வீடுகளுக்கு 35 ஆண்டுகள் வரை கடனுதவி 120% வரை நிதியளிக்க உத்தரவாதம் அளிக்கிறது. இது மக்கள் தங்கள் முதல் வீட்டைச் சொந்தமாக வாங்க உதவும்.
“SJKP என்பதும், நிலையான வருமானம் மற்றும் ஊதியச் சீட்டு இல்லாத மலேசியர்களுக்கு வீட்டுக் கடனுதவிப் பெற உதவும் அரசாங்க உத்தரவாதத் திட்டமாகும்.
“SJKP இன் இந்த கடனுதவித் திட்டம், குறைந்த வருமானம் அல்லது நடுத்தர வருமானம் உள்ள இளைஞர்கள் அல்லது முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, சொந்தமாக வீடு வாங்க ஆசைப்பட்டு, நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதில் சிரமப்படுபவர்களுக்கு நிச்சயமாகப் பயனளிக்கும்,” என கூறினார்.
பினாங்கு மாநிலம் அதிக வரிச் செலுத்தும் பட்டியலில் முன்னணி வகிப்பதால், பினாங்கு மாநிலத்தில் கூடுதலான மக்கள் வீடமைப்புத் திட்டம் (பி.பி.ஆர்) நிர்மாணிக்க வேண்டும் என்று பினாங்கு அரசாங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கும் என்றும் சுந்தராஜூ அறிவித்தார்.
“நாங்கள் PPR திட்டங்களுக்காக தீவில் இரண்டு மற்றும் பெருநிலத்தில் மூன்று என ஐந்து இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
“உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு (KPKT) இந்த ஐந்து இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு PPR திட்டத்திற்கான ஒரு இடத்தை தேர்வுச் செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
“தற்போது, இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்காக, 12-வது மலேசியத் திட்டத்தின் (12MP) ஐந்தாவது ரோலிங் திட்டத்தின் (RP5) கீழ் இணைக்குமாறு KPKT அமைச்சு
பொருளாதார அமைச்சிடம் அறிக்கை அனுப்பியுள்ளது.
“இது மத்திய செபராங் பிறையில் உள்ள தெலோக் ஆயர் தாவார் இடத்தின் லோட் 5381 மற்றும் 5395 கீழ் அமைந்துள்ளது,” என்று சுந்தராஜு மேலும் விவரித்தார்.