ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் பல்வேறு வீடமைப்புத் திட்ட பராமரிப்புப் பணிகள் செயல்படுத்துவதற்காக மொத்தம் ரிம345.3 மில்லியன் செலவிட்டுள்ளது.
இது 2008 முதல் இந்த ஆண்டு ஜூலை,5-ஆம் நாள் வரை ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு என பராமரிப்பு அரசாங்க பினாங்கு உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ.
“ரிம345.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு என்பது, இம்மாநிலத்தில் உள்ள பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 35,501 பராமரிப்புப் பணிகளையும் உள்ளடக்கியது.
“எங்களிடம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு இவ்வளவு பெரிய ஒதுக்கீடு செய்துள்ளோம். இது மாநில அரசின் மிகப்பெரிய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
“இருப்பினும், பினாங்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம். இது அவர்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பு, ” என பத்து லஞ்சாங் மேவா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வருகையளித்தபோது ஜக்டீப் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
முன்னாள் பத்து லங்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆ தியோங் அவர்களும் கலந்து கொண்டார்.
மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பினாங்கு அதிகபட்ச 80% பராமரிப்பு நிதியம் (TPM80PP) மூலம் அங்கு வசிப்பவர்களுக்கானப் பராமரிப்புத் திட்டத்திற்கான ஒப்புதலை அறிவிக்க ஜக்டீப் அங்கு வருகையளித்தார்.
“TPM80PP இன் கீழ், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் புலோக் 98 மற்றும் புலோக் 100 இல் உள்ள 16 யூனிட் தண்ணீர் தொட்டிகளை மாற்றுவதற்கு மாநில அரசாங்கம் ரிம381,040 நிதியளிக்கும்.
“இத்திட்டத்தின் மொத்த செலவில் (ரிம476,300) குடியிருப்பாளர்கள் 20% (ரிம95,260) மட்டுமே ஏற்க வேண்டும்.
“இத்திட்டத்தின் பராமரிப்பு திட்டம் உடனடியாக தொடங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, அந்தக் குடியிருப்புப் பகுதியில் குறுகிய கால வாடகை தங்குமிடம் (STR) நடவடிக்கை குறித்து குடியிருப்பாளர்களின் புகார் பற்றி கருத்து கேட்டபோது, ஜக்டீப் பினாங்கு மாநகர் கழகத்திடம் (MBPP) தக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார். மேலும், மேவா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகக் கழகம் (MC) ஏற்கனவே அத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளது.