ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மாநிலத்தில் உள்ள வீடமைப்புத் திட்டங்களைப் பராமரிக்கும் நோக்கத்திற்காக இதுவரை சுமார் ரிம307.2 மில்லியன் செலவிட்டுள்ளது.
இந்தத் தொகையில் பினாங்கு அதிகபட்ச 80 சதவீத பராமரிப்பு நிதியம் (TPM80PP) மூலம் மேற்கொள்ளப்பட்ட 578 பராமரிப்புத் திட்டங்களும் அடங்கும், என வீட்டுவசதி, உள்ளூராட்சி மற்றும் நகர மற்றும் கிராமத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ இவ்வாறு கூறினார்.
“மாநில அரசு தாமான் ஃப்ரி ஸ்கூல் அடுக்குமாடி வீடமைப்புத் திட்டப் பராமரிப்புப் பணிகளுக்கு மட்டுமே இதுவரை ரிம18.5 மில்லியன் செலவழித்துள்ளது. இதில் 613 பராமரிப்புப் பணிகள் ஏற்கனவே முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
“இது எதிர்காலத்தில் நாம் தொடர வேண்டிய முக்கியமான அடைவுநிலையாகும்,” என்று அவர் இங்குள்ள தாமான் ஃப்ரீ ஸ்கூலுக்கு அருகில் உள்ள டத்தோ கெராமாட்டின் தொகுதி சேவை மையம் ஏற்பாட்டில் நடைபெற்ற செய்த சுகாதாரப் பரிசோதனை திட்டத்தில் கலந்து கொண்டப் பின் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
டத்தோ கெராமாட் தொகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 400 வசதிக் குறைந்த குடியிருப்பாளர்கள் திட்டத்தின் மூலம் இலவச சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
மேலும், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் டத்தோ கெராமாட் சேவை மையக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் மத்திய அரசாங்கத்திடம், பினாங்கு மாநிலத்தில்
198 பராமரிப்புத் திட்டங்கள் மேற்கொள்ள கோரப்படும் ரிம134.76 மில்லியன் நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜெக்டிப் வலியுறுத்தினார்.
“இன்று வரை, நாங்கள் விண்ணப்பித்த தொகையில் ரிம8.4 மில்லியன் மதிப்பிலான 41 திட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த விஷயத்தை ஆராய்ந்து பினாங்கு மாநில அரசின் விண்ணப்பத்தை விரைவில் அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் வலியுறுத்தினார்.