மாநில சுற்றுலாத் துறை தரப்பினர் சி.எம்.சி.ஓ அமலாக்கத்திற்கு வரவேற்பு

Admin

மத்திய அரசு அண்மையில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி, பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் ஜொகூர் போன்ற மாநிலங்களை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரிசையில் (எம்.சி.ஓ) இருந்து நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (சி.எம்.சி.ஓ)  அமலாக்கம் காணும் என அறிவித்தது. 

இதனையடுத்து பினாங்கில் பல சுற்றுலாத் துறை தரப்பினர் இந்த அறிவிப்பை வரவேற்பதாக கூறியதோடு, மாநிலங்களுக்கு இடையே நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டாலும் பினாங்கு வாழ் மக்கள் இம்மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்குப் பங்களிப்பு நல்குவர் என தெரிவித்தனர். 

இந்த நான்கு மாநிலங்களும் கூடிய விரைவில் சி.எம்.சி.ஓ-இன் கீழ் அமலாக்கம் காண்பதோடு  கெடா, கிளாந்தான், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களின் பட்டியலில் இணைகிறது. அதேவேளையில், மலாக்கா, பஹாங், திரங்கானு, சபா, புத்ரா ஜெயா, லபுவான் மற்றும் பெர்லிஸ் ஆகியவை மீட்சிக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்(ஆர்.எம்.சி.ஓ) கீழ்  இடம்பெறும். 

இது வருகின்ற மார்ச் 5 முதல் 18 வரை 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

மத்திய அரசு மற்றும் பிற முக்கிய சங்கங்களின் அறிவிப்பைத் தொடர்ந்து தீவு மற்றும் பெருநிலத்தில் உள்ள ஒரு சில சுற்றுலாத்துறை உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர் தரப்பிடம் முத்துச்செய்திகள் நாளிதழ்  குழுவினர் பேட்டி கண்டனர்.

இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரன்

“இந்திய மரபியல் அருங்காட்சியகம் மத்திய அரசின் அறிவிப்புக்கு ஏற்ப வருகின்ற மார்ச்,5-ஆம் நாள் தொடங்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு  அனுமதிக்கப்படும்.

“பொதுவாகவே, இந்த அருங்காட்சியகத்திற்குப் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மற்றும் மாணவர்களே அதிகமாக வருகையளிப்பர். தற்போது மாநிலங்களுக்கு இடையிலான பயணத் தடை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு இடையூறாக அமைகிறது,” என பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரன்  கூறினார்.


“அதுமட்டுமின்றி,  கோவிட் -19 வழக்குப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மத்திய அரசு எம்.சி.ஓ அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் இந்த ஆணையைப் பிறப்பிக்கலாம், என்றார். 

பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமையகத்தில் இந்திய மரபியல் அருங்காட்சியகத்திற்கு அடுத்து  ‘தமிழ் நூலகம்’ கூடிய விரைவில் திறப்பு விழாக் கண்டு பொதுமக்களுக்கு சிறந்த கற்றல் தளமாக விளங்கும், என நம்பிக்கை தெரிவித்தார். 

மலேசிய தங்கும்விடுதி சங்கம் (எம்.ஏ.எச்)  பினாங்கு மாநில கிளைத் தலைவரும் தெ லைட் தங்கும்விடுதி  பொது மேலாளருமான இராஜ்குமார்

இதனிடையே, மலேசிய தங்கும்விடுதி சங்கம் (எம்.ஏ.எச்)  பினாங்கு மாநில கிளைத் தலைவரும் தெ லைட் தங்கும்விடுதி  பொது மேலாளருமான இராஜ்குமார் மத்திய அரசு  கூட்டம், மாநாடு, திருமண விருந்துகள் போன்றவற்றை நடத்த அறிவிப்பு வழங்கியதை வரவேற்றார்.

“மாநிலங்களுக்கு இடையிலான பயணத் தடை விதித்திருந்தாலும் இம்மாதிரியான அறிவிப்புகள் புத்துணர்ச்சியை அளிக்கிறது. எதுவும் இல்லாததை விட ஏதாவது இருப்பது சிறந்தது,” என  கருதுகிறேன்.

“இதற்கு முன்பே நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக்  கட்டுப்பாட்டு ஆணையை எதிர்க்கொண்டிருப்பதால் இம்முறை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை எதிர்கொள்ள சவாலாக அமையாது. ஏனெனில்,  முதல் எம்.சி.ஓ அமலாக்கத்தில் இருந்தே தெ லைட் தங்கும் விடுதி எஸ்.ஓ.பி-களை முழுமையாக பின்பற்றுகிறது, என்றார். 

‘கச்சாங் பூத்தே’ விற்பனையாளர் சக்திவேல்

‘கச்சாங் பூத்தே’ எனும் இந்திய பலகாரங்களின்  விற்பனையாளர் சக்திவேல்  மூன்று தலைமுறையாக   பினாங்கு கொடி மலையில் இந்த வியாபாரத்தை நடத்தி வருகிறார். அண்மைய காலமாக எம்.சி.ஓ அமலாக்கத்தினால் தற்போது ஜார்ச்டவுன், ஆர்மீனிய தெருவில் கச்சாங் பூத்தே கடை அமைத்துள்ளார்.

“இந்த கடினமான காலகட்டத்தில் மாநில அரசு எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனது பங்களிப்பை நிதியுதவி வழங்கி உதவியற்கு  எனது மனமார்ந்த பாராட்டுகள் தெரிவிக்க விரும்புகிறேன்.

இக்கடையில் முறுக்கு, ‘பக்கோடா’, லட்டு, பால்கோவா, கச்சாங் போன்ற இந்திய பலகாரங்கள் விற்கப்படுகின்றன. 

பினாங்கு சுற்றுலா மேம்பாட்டுச் சங்கத் தலைவர் சுங் ஹக் தெங்

“பினாங்கு சுற்றுலா மேம்பாட்டு சங்கம் (Association of Tourist Attractions Penang)
சார்பாக, மார்ச் 5 முதல் மாவட்டங்களுக்கு இடையிலான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவை  வரவேற்பதாக கூறினார். 

“இந்த நடவடிக்கை நிச்சயமாக பொதுமக்களுக்கு தங்கள் மாநிலத்திற்குள் சுதந்திரமாக பயணிக்க வாய்ப்பளிக்கும், மேலும் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி  ஊக்கத்தை அளிக்கும்.

“இது பினாங்கின் உள்நாட்டு சுற்றுலா துறையை ஊக்குவிக்கும்;  மாநிலங்களுக்கு இடையிலான பயணம் இன்னும் தடைச் செய்யப்பட்டிருப்பதால் சுற்றுப் பயணிகள் வருகை குறைவாகவே காணப்படும். ஆனால், குறைந்தபட்சம் இது மாநிலத்தின் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு சில சாதகமான அறிகுறிகளை வழங்கும்,” என பினாங்கு சுற்றுலா மேம்பாட்டுச் சங்கத் தலைவர் சுங் ஹக் தெங் முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்க்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்.