செபராங் ஜெயா- கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில பொது நூலகத்தில் பல்வேறு மொழிகளில் 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரெயில் எழுத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கண் பார்வைக் குறைபாடு உள்ளவர்களிடையே கல்வியறிவை அதிகரிக்கும் நோக்கத்தில் பிரேயில் எழுத்தில் மொழிபெயர்ப்பு செய்வதாக பினாங்கு மாநில பொது நூலக வாரியத்தின் (பி.பி.ஏ.பி.பி) இயக்குநர் ஷரிமா சல்லே தெரிவித்தார்.
“பிரேயிலில் அதிக வாசிப்புப் படைப்புகள் இருப்பது மிக அவசியம்.
“வாசிப்புப் பழகத்தின் மூலம் சொற்களஞ்சியம், சிந்தனை திறன், ஆளுமை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.
“எனவே, பார்வைக் குறைபாடு கொண்டவர்களைப் படிக்க ஊக்குவிப்பதற்காக பிரேயிலில் அதிக வாசிப்புப் படைப்புகளை வழங்குகிறோம்,” என்று ஷரீமா முத்துச்செய்திகள் நாளிதழ் நடத்திய நேர்காணலில் இவ்வாறு கூறினார்.
செபராங் ஜெயா பொது நூலகத்தில் ‘தொலைபேசி நூலகம்’ (mobile library) இடம்பெறுவதாகவும், அந்நூலகத்தின் மூலம் பினாங்கின் தீவு மற்றும் பெருநிலத்தில் அமைந்துள்ள பள்ளிகளுக்கும் பிரேயில் வாசிப்புப் படைப்புகள் வழங்குவதாகவும் கூறினார்.
“பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை மேம்படுத்த இந்த வாசிப்புப் படைப்புகள் இன்றியமையாததாக திகழ்கிறது.
“இதன் மூலம், மாணவர்கள் மாநில நூலகத்திற்கு நேரடியாக வராமல் புத்தகங்களை இரவல் வாங்கலாம்,” என்று அவர் கூறினார்.
பி.பி.ஏ.பி.பி நூலக அதிகாரி மொஹமட் ஹசானி அப்துல்லா கூறுகையில், இந்த நூலகத்தில் கிடைக்கும் பிரேயில் புத்தகங்கள் மலாய் மொழி, ஆங்கிலம், சீன மொழி மற்றும் தமிழ்மொழி ஆகிய நான்கு பிரதான மொழிகளில் கிடைக்கப்பெறும், என்றார்.
கண் பார்வை குறைப்பாடு கொண்டவர்களுக்கு பிரேயில் எழுத்து படிக்கவும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் கூறினார்.
நூலக அதிகாரியான மொஹமட் ஹசானி அப்துல்லா கண் பார்வை குறைப்பாடு கொண்டிருந்தாலும் அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் கல்விகேள்வியில் நாட்டம் கொள்ள இன்னும் அதிகமான வாசிப்புப் படைப்புகள் தயாரிக்க இலக்கு கொண்டதாகக் கூறினார்.
மேலும், கண் பார்வை குறைப்பாடு கொண்ட பிள்ளைகளை அவர் தம் பெற்றோர்கள் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வாழ்க்கையில் சுயமாகவும் துணிவுடன் வாழ துணைபுரிய வேண்டும், என்றார்.