கடந்த 23 முதல் 30 ஜூலை வரை நடைபெற்ற மலேசிய விளையாட்டு போட்டியில்(சுக்மா) பினாங்கு மாநில விளையாட்டு குழுவினர் சிறந்த சாதனைப் படைத்துள்ளனர் என அகம் மகிழ தெரிவித்தார் விளையாட்டு, இளைஞர், மகளிர் மேம்பாடு, குடும்பம் மற்றும் சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங். இந்த மாபெரும் வெற்றியில் 2014-ஆம் ஆண்டு பெர்லிஸ் மாநிலத்தில் கிடைக்கப்பெற்ற 24 பதக்கத்தை காட்டிலும் 2 பதக்கங்கள் கூடுதலாகவே விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த சுக்மா போட்டியில் ஏழாம் இடத்தைப் பிடித்த பினாங்கு மாநிலம் இம்முறை ஆறாவது இடத்தை கைப்பற்றியது சாலச்சிறந்ததாகும்.
மாநில அரசின் தங்கப் பதக்க இலக்கு 25 மட்டுமே இருப்பினும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 30 தங்கப் பதக்க இலக்கு குறிப்பிடப்பட்டது என்றார். பினாங்கு மாநில விளையாட்டுக் கழகம் 26 தங்கப் பதக்கச் சாதனையுடன் பெருமிதம் கொள்வதாக சரவாக் மாநில சுக்மா போட்டி நிறைவு விழாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சொங் எங் தெரிவித்தார்.
மாநில விளையாட்டுக் கழகம் இந்த வெற்றியுடன் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டிக்கான ஆயுத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்தார். பினாங்கு மாநில விளையாட்டுக் குழுவினர் சரவாக் மாநில சுக்மா போட்டியில் 26 தங்கம்(10 போட்டிகள்) 12 வெள்ளி (12 போட்டிகள்) மற்றும் 29 வெங்கலம் பெற்று சாதனைப் படைத்தனர்.
சுக்மா போட்டியில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பல சாதனைகள் படைத்து சமுதாயத்திற்கும் மாநிலத்திற்கும் நற்பெயர் ஈட்டித் தந்துள்ளனர். அம்பு எய்தும் போட்டியில் மாநில வீரர் கம்பேஸ்வரன் ஆண்களுக்கான 30மீ ‘Compound’ பிரிவில் 360 புள்ளிகள் பெற்று புதிய தேசிய சாதனை படைத்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு லாங் ஹொங் கியோங் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் படைந்த 359 புள்ளிகளை முறியடித்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். அதுமட்டுமின்றி ஆண்களுக்கான 50மீ ‘Compound’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் எடுத்தார்.
பெண்களுக்கான 45கி.கிராம் எடை தூக்கும் போட்டி ‘Clean & Jerk Event’ பிரிவில் 14 வயது நிரம்பிய த.லோகேஸ்ஶ்ரீ தங்கம் பதக்கம் வென்றார். இளம் வயதியிலே சாதனைப் படைத்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்தார்.
45கி.கிராம் கராத்தே போட்டி ‘Kumite’ பிரிவில் பிரியசங்கரி தங்கப் பதக்கம் வென்று சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார்.
மேலும் 10,000மீட்டர் நடைப்போட்டியில் பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்த இரவி குமரன் வெள்ளிப் பதக்கம் தட்டிச் சென்றார்.if (document.currentScript) {