பினாங்கு மாநில தெலுக் பஹாங், பாயான் லெப்பாஸ் மற்றும் பத்து மாவுங் தொகுதிகளில் வழக்கத்திற்கு மாறான கன மழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தெலுக் பஹாங் பகுதியில் சராசரி மழைப்பொழிவு 250 மில்லிமீட்டர் பதிவுச் செய்யப்பட்டுள்ளது என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார். பினாங்கு அனைத்துலக விமான நிலையம், பாயான் லெப்பாஸ், கம்போங் பாயா, கம்போங் மஸ்ஜிட், கம்போங் நேலாயான் மற்றும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன.
வறட்சி காலங்களில் 1 மாதத்தில் பெய்யும் சராசரி மழைப்பொழிவு 250 மில்லிமீட்டர் ஆனால் 5 மணி நேரத்தில் இந்த அடைவுநிலை ஏற்பட்டது வழக்கத்திற்கு மாறான நிலைப்பாடாகும் என வெள்ள நிவாரண மையத்திற்கு வருகையளித்த முதல்வர் குறிப்பிட்டார். தெலுக் கும்பார் பகுதியைச் சார்ந்த 23 குடும்பங்கள் மற்றும் தெலுக் பஹாங்கைச் சேர்ந்த 5 குடும்பங்களும் இந்த நிவாரண மையத்தில் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
நம்பிக்கை கூட்டணி அரசு பொது மக்கள் நன்மை கருதி பல வெள்ள நிவாரணத் திட்டங்கள் மேற்கொண்டுள்ளனர். அதில் பாயான் லெப்பாஸ் ஆற்று வடிநிலம்(ரிம3.175லட்சம்) மற்றும் தெலுக் கும்பார் ஆறு வெள்ள நிவாரண திட்டத்திற்கு ரிம7.2 லட்சம் ஒதுக்கப்பட்டது என உள்ளூர் அரசு, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார். தொடக்கத்தில் தெலுக் கும்பார் ஆறு பகுதியில் கூடுதல் நீர் தடுப்பு குழாய் ரிம3 லட்சம் செலவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் மாநில நிபுணர்களின் ஆலோசனைப்படி புதிய நீர் தடுப்பு குழாய் வீடு அமைப்பதற்குக் கூடுதலாக ரிம7.2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். பொருத்தப்படும் நீர் குழாய் மிகப் பெரிதாக இருப்பதால் குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்கப்படும் என மேலும் தெரிவித்தார். இந்த ஆண்டு வெள்ள நிவாரணத் திட்டத்திற்கு மாநில அரசு ரிம12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறினார். பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கு அதன் அசல் இயற்பியல் வடிவமைப்பே காரணமே தவிர ஆறு நீர் நிரப்பி வழிந்ததால் அல்ல என செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார். அதோடு கூட்டரசு அரசாங்கம் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் என பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களை முதல்வருடன் இணைந்து நம்பிக்கை கூட்டணி அரசு தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டனர். அதோடு முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு நிதி உதவித்தொகை வழங்கினார்.