மாற்றுத் திறனாளி என்பது சேகர் ஓர் ஓவியராக திகழ்வதற்கு தடையல்ல

 

தெலோக் ஆயிர் தாவார் – ஒரு மாற்றுத் திறனாளியாக பிறந்தாலும், பினாங்கு குடிமகனான திரு.த.சகரர் @ சேகர் பிற சாதாரண மனிதர்களைப் போல வாழ்வதற்கு இது தடையாக அமையவில்லை.

உண்மையில், அவரிடம் இருக்கும் குறைபாடுகள் அவரது ஐந்து வயதிலிருந்தே இருந்த ஓவியத் திறமையை வளர்த்து கொண்டு வாழ்வில் தொடர்ந்து முன்னேற உந்துதலாக அமைந்தது.

தனது கல்வியை ஆரம்பக் கல்விச் சான்றிதழ் (எஸ்.ஆர்.பி) வரை மட்டுமே கற்றாலும் அவர் தனது ஓவியத் திறமையை மேம்படுத்துவதில் முயற்சியை இன்னும் கைவிடவில்லை, என சேகர் கூறினார்.

“ஓர் ஓவியர் என்பது எனது
முழு நேர வேலை இல்லை என்றாலும், ஒரு நாள் நான் இத்துறையில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“நான் இப்போது முழுநேர பாதுகாப்பு காவலராக பணிபுரிந்தாலும், இது எனது ஆர்வத்தை ஒருபோதும் தளர்வு அடைய விடவில்லை.

“ஓவியம் வரைவது மட்டுமின்றி, சுற்றுப் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கலைக் கல்வி வகுப்புகள் நடத்தும் பயிற்றுநனராகவும் இருக்கிறேன். மேலும், அருகிலுள்ள பாலர்ப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் சுவரோவியம் வரையும் பணியையும் செய்து வருவதாகக் கூறினார்.

“மேலும், எனது நான்கு குழந்தைகளில் ஒருவருக்கு மட்டும் இந்த ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது, ” என்று தாமான் பந்தாய் பெர்செவுக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பேசிய சேகர், வருமானத்தை ஈட்டக்கூடிய இந்த ஓவியக் கலை திறமையை வளர்க்க விரும்புவதாகக் கூறினார்.

இருப்பினும், வெற்றிப்பெற்ற ஓர் ஓவியக் கலைஞனாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற
தரமான ஓவியக் கருவிகளான அர்கீலிக் வர்ணம், ஓவியப் பலகைகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்றவை வாங்குவதற்கு நிதி பற்றாக்குறை ஒரு தடைக்கல்லாக இருப்பதாக அவர் கூறினார்.

“தற்போது, சுவரொட்டி வர்ணங்கள், ‘சொவ்ட் பஸ்தேல் வர்ணம்’, சாதாரண பென்சில்கள் மற்றும் சாயங்களை மட்டுமே பயன்படுத்தி எழில்மிகு இயற்கை காட்சிகள் மற்றும் மனித முகப் படங்களை வரைகிறேன்.

“எனவே, நான் தயாரிக்கும் ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொன்றும் தலா ரிம10.00-க்கு மட்டுமே விற்க முடியும். இங்கு தயாரிக்கப்படும் ஓவியங்கள் பொதுவாகவே பொதுச் சந்தைகளில் விற்கப்படும்,” என்று பினாங்கு மாநில அரசிடமிருந்து தங்கத் திட்ட நிதியுதவி பெறுபவர்களில் ஒருவரான அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, குடும்ப வருமானத்தை அதிகரிக்க உதவும் சிறந்த தரமான ஓவியங்களைத் தயாரிக்க மாநில அரசிடம் இருந்து சிறு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஓவியரின் கலைப் படைப்புகள்

சேகர் தயாரிக்கும் ஒவ்வொரு ஓவியத்தையும் 10 முதல் 20 நிமிடங்களில் வரைந்து முடிக்க முடியும் என இன்று மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காணமுடிகிறது.

வரைபடங்களை வாங்க அல்லது வரைபட உபகரணங்களை நன்கொடையாக வழங்க விரும்புவோர் சேகரை 017-401 5849 என்ற எண்களில் அழைக்கலாம்.