பினாங்கு மாநில அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வற்றாத ஆதரவை நல்குவது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தாற் போல வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு தக்க சான்றாக அமைகிறது. கடந்த பிப்ரவரி 15-ஆம் திகதி பினாங்கு மாநிலத்தில் உள்ள 24 மிஷினரி பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எட்டாவது முறையாக மாநில அரசு நிதியுதவி வழங்கியது. இதில் ஏழு பள்ளிகள் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இம்மாதிரியான பிரதான கட்டிடங்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என கொம்தார் ‘சீ’ அரங்கில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில் குறிப்பிட்டார் மாநில முதல்வர். இவ்வாண்டு ரிம1315,000 நிதி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநில அரசு இவ்வாண்டு கிரீன்லெண்ட் கொன்வென் இடைநிலைப்பள்ளிக்கு அதிகமாக ரிம200,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. புதிய கட்டிடம் நிர்மாணிப்பு, விளையாட்டு மைதானம் மற்றும் சிற்றுண்டிசாலை அமைத்தல் மற்றும் இதர பழுதுபார்ப்பு ஆகிய அனைத்து மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இந்நிதி வழங்கப்பட்டுள்ளது என தமதுரையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர். மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பினாங்கு மாநில அரசு ஜி.எஸ்.தி வரியை அமல்படுத்தாமல் சிறந்த நிர்வாக முறையில் ஆட்சிச்செய்து பினாங்கு மாநில பள்ளிகளுக்கு பல உதவிகளை நல்கி வருவதை குறிப்பிட்டார். அதோடு, பினாங்கு எதிர்கால அறக்கட்டளையை (Penang Future Foundation) பிரத்தியேகமாக பினாங்குவாழ் சிறந்த மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளைக்காக மாநில அரசு சுமார் ரிம 40 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்த பொது சேவை துறையின் கல்வி உபகாரச் சம்பளம் நிறுத்தப்படவிருப்பதைக் குறித்து பல கேள்விகள் எழுப்பினார். மத்திய அரசு பொது சேவை துறையின் கல்வி உபகாரச் சம்பளம் நிறுத்தினால் வெளிநாடுகளில் மேற்கல்வி தொடங்கும் மாணவர்கள் பல இன்னல்களையும் நிதி சுமையும் எதிர்கொள்வர் எனத் தெரிவித்தார். எனவே, இத்திட்டத்தை மீண்டும் மறுபரிசீலனைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.} else {