நிபோங் திபால் – பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கல்வியே திறவுகோல், இன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முயற்சியும் எதிர்கால சந்ததியினருக்கு பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். ஒவ்வொரு மாணவர்களும் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக உருவாகுவதற்கு கல்வியே அடித்தளமாகத் திகழ்கிறது.
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் திட்டத்தை பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் தொடக்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.
2025-ஆம் ஆண்டுக்கான பள்ளி அமர்வு தொடங்கப்பட்டதை முன்னிட்டு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் பினாங்கு பெருநிலத்தைச் சேர்ந்த 20 தமிழ்ப்பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 800 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்களுக்கானப் பற்றுச்சீட்டுகள் எடுத்து வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் 800 மாணவர்களுக்கு தலா ஒரு ஜோடி பள்ளிச் சீருடைகள், காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான பள்ளி அமர்வை அதிக நம்பிக்கையுடன் தொடங்கும் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.
மேலும், பல குடும்பங்களுக்கு பள்ளிப் பொருட்களை வாங்குவதற்கான செலவு ஒரு பெரிய சுமையாக இருக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் வசதி குறைந்த மாணவர்களுக்கு குறிப்பாக பி40 குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு வழங்குவதன் மூலம் பெற்றோரின் நிதிச் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்று நம்புகிறேன்.
“இந்த நன்கொடை செனட்டர் உறுப்பினரான எனது ஆறு மாத சம்பளத்தைப் பயன்படுத்தி பினாங்கு மாநில பெருநிலத்தில் உள்ள 20 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டது.
“நான் ஈட்டிய வருமானம் மீண்டும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும் இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்த உதவிகள் நல்கப்பட்டது,” என்று செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் லிங்கேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் நேரடியாகச் சென்று 20 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி உபகரணப் பொருட்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் தொடக்கவிழாக் கண்டது. இந்நிகழ்ச்சியில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் துணை இயக்குநர் சக்திவேல், பெர்மாத்தாங் திங்கி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் திட்டத்தை பினாங்கு மாநில தீவில் உள்ள மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் துணை இயக்குநர் சக்திவேல் அவர்களின் கோரிக்கைப் பரீசிலிக்கப்படும் என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கூறினார்.
மேலும், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் இத்திட்டத்தின் தொடக்க விழாவை ஏற்று நடத்த துணைபுரிந்த பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் முன்முயற்சிக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இப்பள்ளிக்கு ரிம1,000 மானியம் வழங்கினார்.