பினாங்கு மாநிலத்தில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என கூறினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். மாநில அரசு வழங்கும் தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர் பள்ளிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு விழாவில் உரையாற்றுகையில் முதல்வர் தெரிவித்தார்.
“தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கும் திட்டத்தை நிராகரிப்பதன் அவசியம் தமக்கு புரியவில்லை எனவும், பிற மதத்தினருக்கு இடைநிலைப்பள்ளி இருக்கும் வேளையில் தமிழுக்கு மட்டும் ஏன் அமைக்கக் கூடாது? இதற்கு முன்னதாக சமர்ப்பித்த பரிந்துரையும் புத்ராஜெயாவில் நிராகரிக்கப்பட்டது” என்றார் முதல்வர்.
“இத்திட்டத்தை செயல்படுத்த ஏன் மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) தலைவர்கள் அமைச்சரவையில் கலந்துரையாடவில்லை” என கேள்வி எழுப்பினார் முதல்வர்.
2017-ஆம் ஆண்டு ‘தேர்தல் ஆண்டு‘ என எதிர்ப்பார்க்கப்படுவதால் மத்திய அரசு முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அனுமதி வழங்கி சரித்திரம் பதிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
மாநில அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்க நிலம் வழங்க தயார் நிலையில் இருக்கிறது என வரவேற்புரையில் கூறினார் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி.
9-வது முறையாக 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிக்கப்பட்டது, அதேவேளையில் பாலர் பள்ளிகளுக்கும் ரிம100,000 லட்சம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்ப்பள்ளிகளுக்கான கண்காணிப்பு சிறப்பு குழுவிற்கு ரிம100,00 வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் திகதி கொம்தார் அரங்கில் இனிதே நடைபெற்றது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாக நம்பிக்கை கூட்டணி அரசு திகழ்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் சில தமிழ்ப்பள்ளிகளில் SWIPE (Smart Wireless Interactive Presentation & Education System) என்னும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாக் மண்டின், புக்கிட் மெர்தாஜாம், மற்றும் சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளிகளில் “21-ஆம் நூற்றாண்டு வகுப்பறை” அதிநவீன வசதியுடன் நிர்மாணிக்கப்பட்டன.
கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்ப்பள்ளிகளில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
*வகுப்பறை பற்றாக்குறை தீர்க்க கூடுதல் வகுப்பறைகள் நிர்மாணிப்பு
*8 பள்ளிகளில் பொது மண்டபம் அமைத்தல்
*12 பள்ளிகளில் கணினி அறை அமைத்தல்
*நவீன கழிவறைகள் நிர்மாணிப்பு
*தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் அறைகள் மறுச்சீரமைப்பு.
*நூல்நிலையம் மறுச்சீரமைப்பு.
* 3 பள்ளிகளில் “21-ஆம் நூற்றாண்டு வகுப்பறை” நிர்மாணிப்பு
தமிழ்ப்பள்ளிகளில் இயங்கி வரும் பாலர் பள்ளிகளையும் மாநில அரசு தற்காத்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு மலாகோப் தமிழ்ப்பள்ளி பாலர் பள்ளிக்காக பிரத்தியேகமாக ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் சுங்கை பாக்காப் மற்றும் கிரியான் தோட்டப் பாலர் பள்ளிகளுக்கும் அனைத்து பொது வசதிகளுடன் கட்டிடம் நிர்மாணிக்கபட்டன என தெரிவித்தார் பேராசிரியர் ப.இராமசாமி.