முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிக்கப் பினாங்கு மாநிலம் நிலம் வழங்கத் தயார். முதல்வர் லிம் குவான் எங் அறிவிப்பு

பிப்ரவரி 17- கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்களின் தேவைகளை முன் நிறுத்தி சேவையாற்றும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஐந்தாம் முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும்           1.75 மில்லியன் நிதி ஒதுகீட்டைப் பகிர்ந்தளித்தது.

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்து வரும் மக்கள் கூட்டணி அரசு பினாங்கு வாழ் இந்தியர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்து வருகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வகையில், பினாங்கு வாழ் இந்திய மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநில அரசு பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி நிர்மாணிக்க நில வழங்கத் தயாராக உள்ளது என்ற தித்திப்புச் செய்தியைப் பலத்த கரவொலிக்கிடையில் மாண்புமிகு பினாங்கு முதல்வர் உயர்திரு லிம் குவாங் எங் தம் சிறப்புரையில் அறிவித்தார். எனினும், அனுமதி வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்பதையும் தெளிவுறுத்தினார். தொடக்கநிலை தமிழ்ப்பள்ளிகள் செயற்படும்போது இடைநிலை தமிழ்ப்பள்ளிகளும் செயற்பட முடியும். இது, பினாங்கு இந்தியர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் கனவு என்றால் அது மிகையாகாது. எனவே மத்திய அரசை மக்கள் கூட்டணி அரசு கைப்பற்றினால் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளியை நிர்மாணிக்கும் கனவு நிச்சயம் சாத்தியப்படும் என்று முதல்வர் கூறியபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

அதுமட்டுமன்றி, அதிக இந்திய மக்களைக் கொண்டிருக்கும் பாகான் டாலாம் தொகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி ஒன்று அமைக்க அனுமதி கோரி துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான டான் ஸ்ரீ முகிதீன் யாசீனுக்கு அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால், இன்றுவரை பதில் வரவில்லையென்று முதல்வர் லிம் வருத்தம் தெரிவித்தார். அதே வேளையில், இந்த ஐந்து ஆண்டுகளில், அஸாத் தமிழ்ப்பள்ளி, வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுப்பிரமணிய தமிழ்ப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு நிலம் வழங்கிப் புத்துயிர் பெறச் செய்ததில் மாநில அரசு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது என்றார்.

2009-ஆம் ஆண்டு 1.5 மில்லியன் மானியம் வழங்கிய மக்கள் கூட்டணி அரசு 2010-ஆம் தொடங்கி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, தமிழ்ப்பள்ளிகளில் இயங்கி வரும் பாலர் பள்ளிகளையும் மாநில அரசு தற்காத்து வருகிறது என்றார். 16 தமிழ்ப்பள்ளிகளில் இயங்கி வரும் பெரும்பாலான பாலர்பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே இப்பள்ளிகளுக்கு உதவும் வண்ணம் மாநில அரசு ரிம100,000 உதவித்தொகை. வழங்கியது. மேலும், பினாங்கின் ஏனைய தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் லிம் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் அன்பழகன் தலைமையில் பாலர் பள்ளிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், வெகு விரவில் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அனைத்து வசதிகளும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாலர் பள்ளி, மாநில அரசால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை வசதிகளைக்கூட சரிவர பெற்றிடாமல் கவலைக்கிடமான சூழ்நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்தது வெள்ளிடைமலையாகும்.  ஆனால், மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் பள்ளிகளின் சோதனைகளும் வேதனைகளும் மாநில அரசின் அக்கறையினாலும் ஈடுபாட்டாலும் சூரியனைக் கண்ட பனி போல ஒவ்வொன்றாக விலகி வருகிறது என்றால் அது மிகையாகாது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் உயர உயர மாணவர்களின் கல்வித் தரமும் வானுயரும் என்பது மறுப்பதற்கில்லை. எனவே, மாநில அரசு வழங்கியுள்ள இந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி ஆசிரியர்களும் மாணவர்களும் சிறந்ததொரு கற்றல் கற்பித்தல் சுழ்நிலையை உருவாக்கி கல்வி கோள்விகளில் சிறந்து விளங்க பாடுபட வேண்டும். சுடர்விளக்காயினும் தூண்டு கோள் வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து சிறந்த கல்வி மானாகத் திகழ வழிவகுக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், பேராசிரியர் ப இராமசாமி உட்பட பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ டடகடர் கே.அன்பழகன், மாநில கல்வி இயக்குநரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு காளிதாஸ், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் திரு வீராசாமி, வழக்கறிஞர் திருமதி மங்களேசுவரி, பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

2013-ஆம் ஆண்டின் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான பினாங்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டு அட்டவணை

எண்

பள்ளிப் பெயர்

மானியம் (ரிம)

1

அஸாத் தமிழ்ப்பள்ளி

97,890.00

2

ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி

29,459.75

3

இராஜாஜி  தமிழ்ப்பள்ளி

42,469.00

4

இராமகிருஸ்ணா தமிழ்ப்பள்ளி

38,241.00

5

சுப்பிரமணிய பாரதி  தமிழ்ப்பள்ளி

24,565.00

6

பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளி

10,671.90

7

சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி

70,849.00

8

மலாகோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி

62,135.45

9

மேபீல்டு தோட்டத்  தமிழ்ப்பள்ளி

33,749.00

10

மாக்மண்டின்  தமிழ்ப்பள்ளி

178,032.00

11

பழனியாண்டி தமிழ்ப்பள்ளி

18,146.20

12

பிறை தமிழ்ப்பள்ளி

52,199.00

13

புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி

124,468.00

14

அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி

51,049.00

15

ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளி

18,535.45

16

பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி

63,949.00

17

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி

96,159.50

18

பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

52,649.00

19

பாய்ராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

52,257.00

20

சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

61,389.00

21

ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி

19,549.00

22

கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

168,078.00

23

சிம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி

39,664.00

24

தாசெக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி

23,449.00

25

திரன்ஸ்கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி

79,549.00

26

வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி

55,570.00

27

நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி

142,159.75

28

சுங்கை பக்காப் தமிழ்ப்பள்ளி

43,118.00

மொத்தத் தொகை

1, 750,000.00

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

857752_601165569900897_1799473083_o

மாநில உயர்மட்டத் தலைவர்களுடனும் சிறப்புப் பிரமுகர்களுடனும்

பினாங்கு தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள் கையில் மாதிரி காசோலையுடன் காட்சியளிக்கின்றனர்.