பினாங்கில் ஒரே மலேசியா மக்கள் வீடமைப்பு திட்டம் (Pembangunan Perumahan Rakyat 1 Malaysia) அல்லது பிரிமா என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் முதல் வீடமைப்புத் திட்டம் இவ்வாண்டின் இறுதியில் தொடங்க உள்ளது என குளுகோர் பகுதியில் உள்ள கம்போங் கஸ்தாம் தளத்தைச் நேரில் சென்று பார்வையிட்டப்போது உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினரான ஜெக்டிப் சிங் டியோ அறிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பிரிமா திட்டத்திற்காக காத்திருக்கிறோம்; முன்னாள் மத்திய அரசால் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் ஆனால் இதுவரை ஒன்றுகூட நிறுவப்படவில்லை என்பதே உண்மையான கூற்றாகும். “ஆனால் இப்போது தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக நான் காலம் தாமதிக்க விரும்பவில்லை, எனவே நான் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணித்து, அவ்வப்போது அதற்கான பணிகளை செவ்வென தொடங்குகிறேன்; எனவே, பினாங்கு மாநிலத்தில் பிரிமா திட்டத்தை விரைவில் மெய்ப்பிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் அவரின் எண்ணத்தை முன்வைத்தார் ஜெக்டிப்.
கம்போங் கஸ்தாம் அருகே கட்டப்படும் பிரிமா வீடமைப்பு திட்டத்தின் முதல் கட்டுமானத்தில் 905 யூனிட் மலிவு விலை வீடுகளும் மற்றும் 257 யூனிட் நடுத்தர மலிவு விலை வீடுகளுடன் விளையாட்டு அரங்கம், வழிபாட்டு இடம், மற்றும் பொது மண்டபம் என பல வசதிகளுடன் கட்டப்படும் என நம்பிக்கைத் தெரிவித்தார். பினாங்கு மாநகர் கழகத்தின் கீழ் மூன்று திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பத்து பிரிங்கி பகுதியில் ஒன்றும் கம்போங் கஸ்தாம் பகுதியில் இரண்டு திட்டங்கள் என அவற்றில் உள்ளடங்கும்.
பத்து பிரிங்கி வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானத்தின் கீழ் 1247 யூனிட் மலிவு விலை வீடுகளும் மற்றும் கம்போங் கஸ்தாம் 1823 யூனிட் மலிவு விலை வீடுகள் என மொத்தமாக 3071 யூனிட் வீடுகள் பிரிமா திட்டத்தின் கீழ் பினாங்கில் நிறுவப்படும் என்றார் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப்.
எனவே, மாநில அரசு பிரிமா வீடமைப்புத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் அனைவரும் ஒன்றாக இணைந்து நீண்ட காலமாக கைவிடப்பட்ட இத்திட்டத்தை அடைவதை இலக்காக கொள்ள வேண்டும் என ஜெக்டிப் கேட்டுக் கொண்டார்.