முதியோர் காப்பகம் அன்பின் சரணாலயமாகத் திகழ வேண்டும்

Admin

வீடு என்பது அன்பு வாழும் சரணாலயம். இது கல்லும் மண்ணும் செங்கலும் சேர்ந்து உருவாகும் கட்டிடம் மட்டுமல்ல மாறாக அன்பு, அமைதி, அக்கறை மற்றும் நல்லிணக்கம் கொண்ட தலமாகத் திகழ வேண்டும். இதன் அடிப்படையில் கே. சண்முகநாதனும் அவரது மனைவி எஸ். ஈஸ்வரியும் கடந்த 18 ஆண்டுகளாக முதியோர் காப்பகத்தை வழிநடத்தி வருகின்றனர்.

அன்புள்ளம் கொண்ட இந்த தம்பதியர் ஜார்ச்டவுனில் அமைந்துள்ள ‘கோல்டன் ஹோம் கேர்’ (Golden Home Care) முதியோர் காப்பகத்தை சொந்தமாக வைத்து வழிநடத்தி வருகிறார்கள்.

“நான் இத்துறையில் கடந்த 2004-ஆம் ஆண்டு காலடி எடுத்து வைக்கும் போது முற்றிலும் புதியவன்.

“முதியோர் காப்பகத்தை அமைப்பதற்கு முன்னதாக நாங்கள் இந்தியா நாட்டிற்குச் சென்றபோது, சில செல்வாக்கு மிக்கவர்கள் இந்தத் துறையில் ஈடுபட ஊக்குவித்த பிறகு, அது எங்கள் ஆள்மனதில் புதிய தேடலைத் தொடக்கியது.

“இதற்கு முன்பு, நான் பாயான் லெப்பாஸில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உதவி தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்தேன்.

“20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குப் பணிபுரிந்த எனக்கு, இந்தியா பயணம் சொந்த தொழிலை தொடங்குவதற்கான தருணம் என்ற புதிய உணர்வை எனக்கு அளித்தது.

61 வயதான சண்முகநாதன் மற்றும் அவரது மனைவி,57 ஆகிய இருவருக்கும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தத் துறையில் பயணிப்பது ஒரு வரம் என்று கூறினர்.

நானும் என் மனைவியும் எங்கள் பெற்றோரை இழந்துவிட்டோம், எங்கள் இரு தரப்பு பெற்றோர்களையும் அவர்களின் வயதான காலத்தில் அன்பு அறவணைப்புடன் கவனித்துக் கொண்ட எங்களின் இயல்பான குணம் இத்துறையைத் தொடங்குவதற்குச் சிறந்த தூண்டுகோளாக அமைந்தது.

“முதியோர் அவர்களுக்கு வயதாகும்போது அன்பையும் அக்கறையையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தலத்தைத் தேடுகின்றனர்.

“எனவே, முதியோர் காப்பகத்தை வழிநடத்த கடவுள் வழங்கிய இந்த வாய்ப்பிற்காக நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். “எங்களால் முடிந்தவரை அவர்கள் அனைவருக்கும் இயன்ற சேவையை வழங்குவோம்,” என்று சண்முகநாதன் ஜாலான் வெர்மோன், கோல்டன் ஹோமில் ஒரு பிரத்தியேக நேர்காணலின் போது முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்த முதியோர் காப்பகத்தில் மொத்தம் 20 முழுநேர குடியிருப்பாளர்களும்; ஆறு ஊழியர்களும் பணிபுரிகிறார்கள் என்று அறியப்படுகிறது.

இந்த வீட்டில் தற்போது வயது முதிர்ந்த 92 வயது பெண் மற்றும் 90 வயது ஆண் என இரண்டு வயதானவர்கள் உள்ளனர்.

“அங்கு தங்கியிருக்கும் முதியோர்கள் நல்ல சுகாதாரம், சிறந்த உணவுமுறை, உடற்பயிற்சி என சுறுசுறுப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக தினசரி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என்றும் சண்முகநாதன் கூறினார்.

தற்போதைய இடத்திற்கு மாற்றலாகி செல்வதற்கு முன், சண்முகநாதன் ஜாலான் ஸ்காட்லாந்தில் ஒரு மாளிகை வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த காப்பகத்தைத் தொடங்கியதாகக் கூறினார்.

“தற்போது இந்தக் காப்பகம் பினாங்கு மருத்துவமனையிலிருந்து சில நிமிடங்கள் சென்றடையும் தூர இடைவெளியில் அமைந்துள்ளதால், இது ஒரு பிரதான இடமாகும். இந்தக் காப்பகம் முதியோர்களால் நிரம்பியிருப்பதைக் கருத்தில் கொள்வதற்கான முக்கியமான வசதியாக இது கருதப்படுகிறது.

“அவசரநிலைகள் ஏற்படும் போது எங்களிடமிருந்து அழைப்புகள் பெற்றவுடனே மருத்துவமனையின் அவசர உதவி உடனடியாகப் பெற முடியும். அதற்கு பினாங்கு பொது மருத்துவமனைக்கு நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளோம்.

மருத்துவப் பரிசோதனைகளைப் பொறுத்தவரை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், இந்த காப்பகத்தை வழிநடத்த வாடகை, உணவு மற்றும் பிற தேவைகள் போன்ற செலவுகளை ஈடுகட்ட ஏறக்குறைய ரிம25,000 மாதந்தோறும் செலவிடப்படுகிறது என்று அறியப்படுகிறது.

ஓர் ஆண்டில் குறைந்தது 10 நிகழ்ச்சிகளை இந்தக் காப்பகம் கொண்டாடுகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு தனது கணவர் இந்தக் காப்பகத்தை நிறுவியதைத் தொடங்கி அவருடன் சேர்ந்த பணியாற்றியதில், 2015 ஆண்டு ஜார்ச்டவுனில் உள்ள ஜாலான் பத்து கந்துங்கில் அமைந்துள்ள கேரிங் முதியோர் காப்பகத்தைத் தொடங்க ஊக்குவித்ததாக திருமதி ஈஸ்வரி கூறினார்.

சண்முகநாதனும் ஈஸ்வரியும் இந்தத் துறையில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் இத்துறையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக கால் தடம் பதித்து வருகின்றனர்.

நேர்காணலின் போது சண்முகநாதன் கூறுகையில், தன்னையும் தனது மனைவியையும் புதிய முதியோர் காப்பகம் தொடங்க விரும்பும் தரப்பினர் தொடர்புக் கொள்ளும் போது அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள், என்றார்.

“எங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்,” என்று ஈஸ்வரி கூறினார்.
இறுதியாக, கணவன்-மனைவி இருவரும் பொறுமை மற்றும் வயதானவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நேரம் என்பது இத்துறையில் நீடித்திருப்பதற்கு இரு மிக முக்கியமான மதிப்பு மிக்க கூறுகளாகத் திகழ்கிறது என்று கூறினர்.