முத்து செய்திகள் நாளிதழ் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியை(Bakat Si Celik 2.0) மார்ச் முதல் ஜூலை மாதம் வரை நடத்தியது. இப்போட்டியில் பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட பள்ளிக்கூட மாணவர்கள் தங்களின் படைப்புகளை அனுப்பினர். பினாங்கு மாநிலம் முழுவதிலிருந்து இப்போட்டிக்காக 1,492 படைப்புகள் அனுப்பப்பட்டன. இப்போட்டியில் பல இனப் போட்டியாளர்கள் பங்கேற்றது பினாங்கு மாநில மக்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றது.
சிறுவரளுக்கான வர்ணம் தீட்டும் போட்டி 2015-யின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு தத்தம் ரிம200, ரிம 150, ரிம 100 மற்றும் 20 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல்நிலை வெற்றியாளரான பன்னிரண்டு வயது நிரம்பிய சூம் சன் சீனப்பள்ளி மாணவரான லிம் ஹுய் சின் மலேசியாவை பிரதிநிதித்து பல வர்ணம் தீட்டும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் மூன்றாவது முறையாக இப்போட்டியில் தொடர்ந்து வாகை சூடியுள்ளார் என்பது பாராட்டக்குறியதாகும்.
இதனிடையே முத்து செய்திகள் நாளிதழ் மற்றொரு போட்டியாக குறுக்கெழுத்து புதிர்ப் போட்டியையும் (Peraduan Teka Silang Kata) நடத்தியது. பினாங்கு மாநில சரித்திரத்தை மையமாகக் கொண்டு இப்போட்டி உருவாக்கப்பட்டது. இதில் பலகாரக்கடை வியாபாரியான அமாட் சுஹிர் முகமது ஷாகீர் வெற்றி வாகைச் சூடி ரிம500 ரொக்கப்பணத்தை வென்றார். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியது எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார். “பினாங்கு மாநிலம் வளமானதாகவும் சிறந்த பொருளாதார வளர்ச்சியுடன் அறிவார்ந்த மற்றும் அனைத்துலக நகரமாக உருவெடுக்க அனைத்து தரப்பினர் தங்களின் வற்றாத ஆதரவை நல்க வேண்டும்” என தமது சுலோகமாக பதிவேற்றி வெற்றிப் பெற்றார்.