ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடகமான முத்துச் செய்திகள் நாளிதழ் (Buletin Mutiara), அதன் டிஜிட்டல் தகவல் ஊடகத்தை வலுப்படுத்துவதுடன், அச்சுப் பிரதிகள் விநியோகத்தையும் தொடரும்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், முத்துச் செய்திகள் நாளிதழ் அச்சுப் பிரதிகளுக்கு இன்னும் கோரிக்கை உள்ளது என்று முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“தற்போது, அதிகமான மக்கள் நடப்பு செய்திகளுக்காக சமூக ஊடகங்களை முதன்மை தேர்வாக அணுகுகின்றனர். சமூக ஊடகங்கள் குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது அதிவேகமாக வளர்ந்து வருகின்றன.
“மேலும், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், அச்சு ஊடகத்தை தங்கள் செய்தி வாசிக்கும் ஊடகமாக தேர்வுச் செய்பவர்கள் சுமார் 15% மட்டுமே உள்ளனர்,” என்று சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது புலாவ் பெத்தோங் சட்டமன்ற உறுப்பினர் முகமது இஸ்மாயில் அவர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
இருப்பினும், முத்துச் செய்திகள் நாளிதழ் அச்சுப் பிரதிகளுக்கு இன்னும் மக்களிடையே கோரிக்கை இருப்பதால் அதன் வெளியீடுத் தொடரப்படும்.
மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகளை மேம்படுத்துவதில் முத்துச் செய்திகள் நாளிதழ் முக்கிய கருவியாக இடம்பெறுகிறது. இதன் மூலம், வெளியிடப்படும் செய்திகளின் உள்ளடக்கம் உண்மையானது மற்றும் தற்போதைய தேவைகளுடன் ஒத்துப்போகிறது; பினாங்கு மக்களுக்காக தெளிவான மற்றும் எளிமையான தகவல்களை விளக்கப்படம் வடிவில் காண்பித்தல்; தற்போதைய சிக்கல்கள் மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்துடன் காணொலி மற்றும் வெளியீடுகளை பல்வகைப்படுத்துதல்; மற்றும் செய்தி உள்ளடக்கம் மற்றும் நேர்காணல்களை பன்முகப்படுத்துதல் ஆகியவை இடம்பெறுகிறது,” என்று சாவ் கூறினார்.