பத்து மாவுங் – தென்மேற்கு மாவட்ட சமூகநலத் துறை(ஜே.கே.எம்), பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன் இணைந்து பாயான் பாரு, மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையம் (PAWE) அமைக்கப்பட்டுள்ளது.
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தி ஜின், மலேசிய மக்கள் தொகையில் பினாங்கு மாநிலம் உட்பட 2030-க்குள் 15 விழுக்காட்டினர்
மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என்று கூறினார்.
“வருங்காலத்தில் ‘வயோதிகள் கொண்ட நாடு’ என்ற சூழ்நிலையை எதிர்நோக்க இன்னும் தயாராகவில்லை என்பதை காண முடிகிறது.
எனவே, வயதானவர்களைப் பராமரிப்பதில் ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் திட்டங்களைப் பின்பற்றலாம். இந்நாடுகளில் வயதானவர்கள் நேரத்தை நல்வழியில் பயன்படுத்துவதோடு சமூக மேம்பாட்டிற்கும் துணைபுரிகின்றனர்.

“நான் ஒரு முறை தைவான் நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்குச் சென்றேன். அங்கு முதியவர்கள் தன்னார்வ முறையில்
சுற்றுப்பயணி வழிகாட்டியாகப்
பணிப்புரிவதைக் கண்டேன்.
“அவர்களின் சம்பளம் குறித்து கேட்டபோது, அவர்களுக்கு உணவுக்கான ஊக்கத்தொகை மற்றும் பிற ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுவதாகக் கூறினர்.
இதன் மூலம் அவர்களின் பங்களிப்பு மதிக்கப்படுவதோடு, வாழ்க்கையையும் அனுபவித்து வாழ்கின்றனர்,” என்று புக்கிட் கெடோங் அருகிலுள்ள மூத்த குடிமக்கள் மையத்திற்கு வருகையளித்த போது சிம் இவ்வாறு கூறினார்.
மூத்த குடிமக்களுக்கான மையம் பாலேக் புலாவுக்கு அடுத்து பாயான் பாருவில் இரண்டாவது மையமாகத் துவக்க விழாக் கண்டது.
பாயான் பாரு, மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையம் உள்ளூர் மூத்த குடிமக்களுக்கான பொழுதுபோக்கு தளம்; சுகாதார மையம்; முஸ்லிம்களுக்கான சமய வகுப்புகள் மற்றும் பிற மத சமய நடவடிக்கைகள் வழிநடத்த
சிறந்த தளமாக அமையும்.
இதற்கிடையில் பாயான் பாரு, மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி) ஏற்ப சிறிய அளவிலான குழு முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
“இந்த மையத்தை கூடிய விரைவில் முதல்வர் சாவ் கொன் யாவ் தலைமையில் திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மூத்த குடிமக்கள் இம்மையத்தில் பதிவு செய்யலாம், ” என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், மூத்த குடிமக்கள் தொடர்பான புதிய சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.
“இன்றைய மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்பட்டு; துஷ்பிரயோகம் செய்யப்பட்டு; தங்கள் சொந்த குழந்தைகளால் விரட்டப்பட்டு; சேமநிதி வாரியம்(இபிஎஃப்) சேமிப்பு தொகையும் திருடப்பட்டு; ஆன்லைன் மோசடிகள் மற்றும் பலவற்றில் பதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த குடிமக்களுக்கு மளிகை பொருட்கள் சிம் தி சின் வழங்கினார்.