பினாங்கு மாநில அரசு மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது என்பதனை சித்தரிக்கும் வகையில் மூன்றாவது கூழ்மப்பிரிப்பு சிகிச்சை மையத்தை மாநில அரசு ‘MAA Medicare” நிறுவனத்துடனும் இணைந்து பட்டர்வொர்த் ஜாலான் பாருவில் திறப்பு விழாக் கண்டது. அவ்வட்டாரத்தில் பதிவுப்பெற்ற கூழ்மப்பிரிப்பு நோயாளிகளுக்கு மாநில அரசு ரிம1.1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இதனிடையே, மாநில அரசு பினாங்கு வாழ் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரிம30 உதவித்தொகையை தொடர்ந்து வழங்கும் என வாக்குறுதி அளித்தார் முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மேலும், மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை நிறுத்தாமல் இதனை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் மாநில முதல்வர் . பொருளாதார பிரச்சனையை எதிர்கொண்டிருந்தாலும் மாநில அரசு சமூகநல பிரச்சனைக்கு தோள்கொடுக்க தவறியதில்லை மாறாக இன்னும் அதிகமான உதவிகளை வேண்டியவர்களுக்கு வழங்கி வருகிறது என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் .
மாநில அரசு தற்போது பாலே புலாவ், அட் தஃவா மசூதி பெர்தாம் மற்றும் செபராங் ஜெயா என மூன்று இடங்களில் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை மையத்தை கொண்டுள்ளன. இம்மூன்று கூழ்மப்பிரிப்பு சிகிச்சை மையத்திற்கு மாநில அரசு ரிம 6 கோடி செலவிட்டுள்ளது. இதன் வழி மக்கள் நலன் மிக்க மாநிலமாக பினாங்கு திகழ்கிறது என்றால் மிகையாகாது. இம்மூன்று மையங்களிலும் 40 கூழ்மப்பிரிப்பு இயந்திரங்கள் சிகிச்சைக்காக பொருத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு கூழ்மப்பிரிப்பு சிகிச்சைக்கு வழங்கும் உதவித்தொகையான ரிம50 தொடர்ந்து வழங்குவதை நிலைநிருத்த வேண்டும் என அயிர் பூத்தே மூத்த குடிமக்களுக்கான தங்கத் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய அரசு வழங்கும் இந்த உதவித்தொகையானது ஏழ்மையான சூழலில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரிதும் துணை புரியும் என நம்பிக்கை தெரிவித்தார்.