பினாங்கு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சாரம் பினாங்கு சட்டமன்ற வளாகத்தில் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ஐக்கிய நாடுகளின் அமைப்பு அறிமுகப்படுத்திய அனைத்துலக ஆரஞ்சு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு மாநிலத்தில் இப்பிரச்சாரம் துவக்கம் கண்டது.
இவ்வாண்டு “சைபர் வன்முறையை நிறுத்திடு” (Hentikan Keganasan Siber) எனும் கருப்பொருளுடன் கெ.டி.யூ கல்லூரியில் நடைபெற்ற மற்றொரு தொடக்க விழாவில் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் கலந்து கொண்டார். இவ்வாண்டு 16 நாட்களுக்கு தொடர்ந்தாற்போல நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் 10,000 கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பிரச்சாரத்தின் மூலம் அனைத்து தரப்பினரிடையே பெண்களுக்கு எதிரான வன்முறையை பற்றிய விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் மேலோங்க உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்.
பெண்களுக்கு ஏற்படும் வன்முறை அல்லது பாலின வன்முறைகள் என்பது பொதுப்பிரச்சனையாகக் கருதப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான இப்பிரச்சனைகள் வெளிவராமல் இருப்பதற்கு காரணம் குடும்ப கெளரவத்திற்கு முக்கியதுவம் கொடுப்பதும், களங்கம் மற்றும் அவமானம் ஏற்படும் என்ற எண்ணம் ஏற்படுவதாலும் மற்றும் யாரிடம் உதவி நாடுவது என்று தெரியாமல் இருப்பதாலும் குடும்ப வன்முறைமை அதிகமாகிறது. இப்பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனை என்று பொதுமக்கள் ஒதுங்கிவிடாமல் பொது பிரச்சனையாக கருதி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்த இப்பிரச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது வெள்ளிடைமலை.