மூன்று சகோதரர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல அனுமதி -சூன்

 

பட்டர்வொர்த் – வறுமையின் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பள்ளிப் படிப்பை நிறுத்திய மூன்று சகோதரர்கள் ஒரு வார பள்ளி விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் செல்வார்கள்.

15 வயதான தர்மராஜா, கம்போங் கஸ்தாம் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவமும், ஹிராஷ், 10 மற்றும் யோஷ்வின்,8 பாகான் ஜெர்மல் தேசியப்பள்ளியில் முறையே நான்காம் மற்றும் இரண்டாம் ஆண்டு படிப்பை மீண்டும் தொடங்குகிறார்கள்.

மாநிலக் கல்வித் துறையின் முதன்மை உதவி இயக்குநர் (திட்டமிடல் மற்றும் மேலாண்மைத் துறை) டத்தோ சுல்காஃப்லி கமருடின் அவர்கள் இந்த மூன்று மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான அனுமதிக் கடிதத்தை தர்மராஜாவிடம் அம்பாங் ஜாஜாரில் உள்ள அவரது வாடகை வீட்டில் வழங்கினார்.

“எனது நீண்ட நாள் கனவு நனவாகியது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, ஒரு நல்ல மகனாக என் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற இலட்சியத்தை நிறைவேற்ற கடினமாகப் படிப்பேன்”.

“பள்ளிக்குத் திரும்ப உதவிய பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீக்கு நன்றித் தெரிவிப்பதாக,” அவர் கூறினார்.

“மேலும், மாநில கல்வித்துறை மற்றும் எனது குடும்பத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

சிறுவர்களின் தாயாரான மோகன செல்வி,39 சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ தனது
குடும்பத்திற்கு நிறைய உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன், என்றார்.

அண்மையில், மாணவர்கள் கல்வியில் பின்தங்கி விடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் கணினியை நன்கொடையாக வழங்கியதாகக் கூறினார். மேலும், இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினருமான சூன் லிப் சீ, அரசு சாரா இயக்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவியுடன் தனது குடும்பத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளுக்கானப் பொருட்களையும் வழங்க ஏற்பாடுச் செய்தததாகவும் தெரிவித்தார்.

“என் மகன்கள் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் வறுமையின் காரணமாக என்னால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.

ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, மாணவர்களுக்குப் பள்ளிப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் பிற அடிப்படைப் பொருட்களை வழங்கினார்.

செபராங் பிறை மாநகர் கழகத்தின் முன்னாள் கவுன்சிலர் அஞ்சோ தான் இந்த சகோதரர்களின் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

சூன் அவரது சேவை மையம் உதவியுடன் தர்மராஜாவையும் மோகன செல்வியையும் கம்போங் கஸ்தாம் இடைநிலைப்பள்ளிப் பதிவுக்காக அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

“எல்லாம் முடிவடைந்தவுடன், அடுத்த திங்கட்கிழமை முதல் மீண்டும் தர்மராஜாவும் அவரது சகோதரர்களும் பள்ளிக்குத் திரும்புவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

“எந்தக் குழந்தையும் கல்வியை இழக்கக் கூடாது,” என்றார்.

மேலும், தனது சேவை மையம் மூலம் தொடர்ந்து இக்குடும்பத்தினருக்கு உதவி செய்வதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், இக்குடும்பத்திற்கு உதவ முன் வந்த சட்டமன்ற உறுப்பினரின் முன்முயற்சியை சுல்காஃப்லி பாராட்டினார்.

இம்மாதிரியான முயற்சிகள் தேவைப்படுபவர்களுக்கு உதவ மற்றவர்களையும் ஊக்குவிக்கும் என்று சூன் நம்பிக்கை தெரிவித்தார்.