தாசேக் குளுகோர் – பினாங்கு மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. மேஃபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாநில அரசின் முயற்சியில் புதியக் கட்டிடம் திறப்பு விழாக் கண்டது.
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதலமைச்சர் முனைவர் ப.இராமசாமி இன்று அதிகாரப்பூர்வமாக இந்தப் புதியக் கட்டிடத்தைத் தொடங்கி வைத்தார். இப்புதிய கட்டிடம் பிரத்தியேகமாக பாலர்ப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு உபயோக்கிக்கப்படும்.
“பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு குழுவுடன் இணைந்து தமிழ் பாலர்ப் பள்ளி மற்றும் அதன் மேம்பாட்டிற்கு குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதம் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தரம் மேம்பாடுக் காண்கிறது,” மேஃபீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் சிறப்புரை வழங்கிய முனைவர் இராமசாமி கூறினார்.
“இதனிடையே, மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய 15 ஆண்டுகளில் பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் சிறந்த மேம்பாட்டினைக் காண முடிந்தது என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு அனைத்து முயற்சிகளையும் வரும்காலங்களில் தொடர்ந்து எடுப்பதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என பேராசிரியர் உறுதியளித்தார்.
“புறநகர் பகுதிகளில் மூடப்படும் தமிழ்ப்பள்ளிகளின் உரிமத்தைக் கொண்டு நகர்ப்புறங்களில் புதியத் தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்க முடியும்.
“அண்மையில் கெடாவில் பெட்ணோக் தமிழ்ப்பள்ளி மூடப்பட்டது. இப்பள்ளியின் உரிமத்தை கொண்டு பாகானில் புதியத் தமிழ்ப்பள்ளி அமைக்க மாநில அரசு ஏற்கனவே 4 ஹெக்டர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மலேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இம்ராஹிமிடம் நான் பரிந்துரைத்துள்ளேன். இக்கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்,” என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு மாநில அரசாங்கம் போலவே மற்ற மாநில அரசாங்கமும் தத்தம் மாநிலங்களில் தமிழ்ப்பள்ளியின் மாண்பினை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் டேவிட் மார்ஷல், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழுத் தலைவர் டத்தோ அன்பழகன் மற்றும் இந்திய சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேஃபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நலனுக்காக பங்களித்த முன்னாள் வாரியக் குழுத் தலைவராக இருந்த மறைந்த டத்தோ செளவுந்தரராஜனை இராமசாமி நினைவுக்கூர்ந்தார்.
மேஃபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் அறிவியல் அறை, பாலர்ப்பள்ளி வகுப்பு, மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் இதர வசதிகளையும் வளர்ச்சியையும் வழங்கிய பினாங்கு மாநில அரசிற்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.கோமதி நன்றி நவிழ்ந்தார்.
இந்த மேஃபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை 81 மாணவர்கள் பயில்கின்றனர். அதேவேளையில் , அப்பள்ளியில் பாலர்பள்ளியில் 30 மாணவர்கள் பயில்கின்றனர்.