மாநில அரசு ஜோர்ச்டவுன் பகுதியில் காணப்படும் சந்து பாதையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்கள் வரவேற்றனர். இத்திட்டம் நடைமுறை படுத்துவதற்கு முன்பு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
பினாங்கு மாநகர் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்துக்களத்தில் அப்பகுதியை சேர்ந்த 40 வியாபாரிள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில் உரையாற்றுகையில் இந்த உருமாற்றுத் திட்டம் மேற்கொள்வதன் மூலம் சந்து பாதைகளின் சுற்றுச்சூழல் மாற்றியமைக்கப்படும் என்றார். “ இத்திட்டம் வாயிலாக சந்து பாதை என்றாலே இருண்டு, ஆபத்து, புறக்கணிப்பு, அசுத்தம் என்ற எண்ணத்திலிருந்து பாதுகாப்பு, பசுமை மற்றும் தூய்மை என்ற கண்ணோட்டத்திற்கு மாற்றி அமைக்கப்படும்“.
இத்திட்டத்தில் சாலைகள் மறுசீரமைப்பு, மரங்கள் நடுதல், விளக்குகள் பொருத்துதல், பயண வழிகாட்டி பதாகைகள் பொருத்துதல் ஆகிய பணிகள் இடம்பெறும்.
“உருமாற்றம் காணப்படும் இந்தச் சந்து பாதை மிதிவண்டி பாதையாகவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், மேலும் எதிர்காலத்தில் வியாபாரம் செய்யவும் சாத்தியம் உள்ளது” என கூறினார் பத்தாயா.
இந்த மேம்பாட்டுத் திட்டம் மூன்று பிரிவாக இடம்பெறுகிறது. முதல் பிரிவில் ஜாலான் மகசின் இருந்து ஜாலான் குட்வாரா வரை, இரண்டாவது பிரிவில் ஜாலான் சோங் பாட் தீ இருந்து ஜாலான் டாக்டர் லிம் சுயூ லியோங் வரை, மூன்றாவது பிரிவில் லெபோ தமிழ் இருந்து ஜாலான் டாக்டர் லிம் சுயூ லியோங் வரை மேற்கொள்ளப்படும் என மாநகர் கழக செயலாளர் துங் செங் தெரிவித்தார்.
ஜோர்ச்டவுன் பகுதியில் இருக்கும் சந்து பாதையை மேம்படுத்த பொது மக்களின் கருத்து மற்றும் கணக்கெடுப்பு வரவேற்கப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள் http://www.mbpp.gov.my/ எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம். பிப்ரவரி 20-ஆம் திகதி முதல் 1 மாதத்திற்கு இந்தக் கணக்கெடுப்பு இடம்பெறும்.