பினாங்கு கூட்டரசு செயலாக்க குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜைனல் அபிடின் ஒஸ்மான் 2016-ஆம் ஆண்டு நாட்டின் வரவுச்செலவு திட்டத்தில் மத்திய அரசு பினாங்கு மாநிலத்திற்கு பிரத்தியேகமாக ஒதுக்கீடு வழங்கியுள்ள ரிம5.4 பில்லியன் நிதியைப் பற்றி விவரிக்க வேண்டும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. 11-வது மலேசிய திட்டத்தின் கீழ் பினாங்கு மாநில திட்டங்கள் அமல்படுத்த இந்நிதியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெ ஸ்தார் (The Star) நாளிதழில் வெளியாக்கியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட செய்திதாளில் வெளியிடப்பட்டிருப்பதை போல் அவ்வாறான நிதி ஒதுக்கீடப்பட்டது உண்மை எனில் அதன் சம்மந்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களின் பட்டியலை பினாங்கு மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பரிந்துரைத்தார். ஏனெனில், இத்திட்டங்கள் அனைத்து பினாங்கு மாநில மற்றும் மக்களின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பங்கினை அளிக்கும் என்பது வெள்ளிடைமலை. அதோடு, நம் நாட்டில் மூன்றாவது அதிக வரி அதாவது ரிம 6.3 பில்லியன் வரி செலுத்தும் மாநிலமாக பினாங்கு திகழ்கிறது. இருந்த போதிலும், மத்திய அரசு பினாங்கு மாநில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முறையான அனுமதி வழங்குவதில்லை. இந்நிலை 11-வது மலேசிய திட்டத்தில் பினாங்கு மாநிலத்திற்கு வெள்ள நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததன் மூலம் வெளிப்படுகிறது. பினாங்கு அதீர வளர்ச்சி அடைந்து வரும் மாநிலம் என்பதால் இங்கு பெருநிலம் மற்றும் தீவுப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்வதால் வெள்ளம் ஏற்படுகின்றது. இதன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு கடிதங்களும் ஆவணங்கள் அனுப்பியும் இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டது என வருத்தத்துடன் கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப்.
எனவே, பினாங்கு கூட்டரசு செயலாக்க குழுவின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜைனல் அபிடின் ஒஸ்மான் விரைவில் தமக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் பினாங்கு மாநில அரசு குறிப்பிட்ட மேம்பாட்டுத் திட்டங்களைக் கண்காணிக்கவும் செயல்படுத்தவும் இலகுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.