பினாங்கு மாநகர் கழகத்தின் ஏற்பாட்டில் ரெலாவ் விளையாட்டு வளாகம் திறப்பு விழா இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் .
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இவ்விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் குளம் அனைத்துலக ரீதியில் அனைத்து வசதிகளுடன் இருப்பதாக வர்ணித்தார். 2.17 ஹெக்டர் நிலப்பரப்பில் இக்கட்டுமானம் தொடங்கி 20 மாதக்காலகட்டத்தில் ரிம21.4 கோடி பொருட்செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக திறந்த குத்தகை முறையில் ஃபொகஸ் முர்னி சென்.பெர்ஹாட் நிறுவனம் தேர்வாகியது குறிப்பிடத்தக்கதாகும்.
ரெலாவ் விளையாட்டு வளாகம் நிர்மாணிப்பதன் வழி பினாங்கு வாழ் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இளையோர் முதல் முதியவர் வரை அமல்படுத்த ஏதுவாக அமையும் என்றார். நவீன வசதிகளுடன் கூடிய ஒரு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், ஒரு டைவிங் குளம், பத்து பூப்பந்து விளையாட்டு வளாகம், உணவு விடுதி, கடைகள், உடற்பயிற்சிக் கூடம், வாகன நிறுத்தம் மற்றும் இதர வசதிகளுடன் இவ்விளையாட்டு வளாகம் நிறுவப்பட்டுள்ளதை எண்ணி அகம் மகிழ்ந்தார் முதல்வர். அதோடு, இந்த பிரமாண்டமான விளையாட்டு வளாக திட்டத்தை அமல்படுத்தும் டத்தோ பண்டார் பத்தாயா மிந்தி இஸ்மாயில் மற்றும் பினாங்கு மாநகர் கழகத்தின் கவின்சிலர்கள் அனைவரையும் பாராட்டினார்.
இதனிடையே, இத்திட்டம் பசுமை கட்டிடம் குறியீட்டு ஒருங்கிணைப்பாளர் (green building index facilitator) துணையின்றி பினாங்கு மாநகர் கழக வடிவமைப்பின் கண்காணிப்பில் கட்டப்பட்டது என்றால் மிகையாகாது. இது பினாங்கு மாநகர் கழகம் அனைத்துலக அளவிலான பொது திட்டங்களை செயல்படுத்த சொந்த நிபுணத்துவத்தை பெற்றிருப்பதை சித்தரிக்கின்றது.